நாமலுக்கு 29ஆம் நாள் வரை விளக்கமறியல்
பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, செப்ரெம்பர் 29 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். பொதரகம இன்று உத்தரவிட்டுள்ளார்.
எயர் பஸ் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒரு பரிவர்த்தனையில் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்சவின் விளக்கமறியல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், கொழும்பு பிரதான நீதிவான் முன்பாக அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, செப்ரெம்பர் 22 ஆம் நாள் எழுத்துப்பூர்வமான பிணை மனுவைத் தாக்கல் செய்யுமாறு பிரதிவாதி தரப்பு சட்டவாளருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் முறைப்பாட்டாளரான இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, தனது ஆட்சேபனைகளை செப்ரெம்பர் 25 ஆம் நாளுக்குள் தாக்கல் செய்யுமாறும் அவர் கட்டளையிட்டார்.
பிணை மனு மீதான ஆணை செப்ரெம்பர் 29 ஆம் நாள் வழங்கப்படும் என்றும் நீதிவான் மேலும் தெரிவித்துள்ளார்.
