அனைத்துலக விசாரணைப் பொறிமுறை கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி
தமிழினப் படுகொலைகள் தொடர்பாக அனைத்துலக நீதி விசாரணைப் பொறிமுறையொன்றை தாமதமின்றி உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பேரவையினால் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியப் பேரவையின் அழைப்பில் ஈழத்தமிழ் குடிசார் அமைப்புக்களும் பொதுமக்களும் செம்மணி உள்ளிட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக நீதிவிசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தி இன்று முற்பகல் நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக ஒன்று கூடினர்.
அங்கிருந்து முத்திரைச்சந்தியில் உள்ள கிட்டு பூங்கா நோக்கி பேரணி இடம்பெற்றது.
செம்மணியில் வெளிவந்துள்ள எலும்புக்கூடுகளை அடையாளப்படுத்தும் வகையில், கறுப்புடையுடனும் மண்டையோட்டு அடையாளத்துடனும் இளையோர் முன்னகர, பெருமளவிலானோர் பேரணியாகச் சென்றனர்.
செம்மணி படுகொலைக்கு அனைத்துலக விசாரணை வேண்டும், மக்கள் காணிகளில் படையினர், மக்களோ தெருக்களில், தமிழர் அடையாளங்களை ஆக்கிரமிக்கும் பௌத்தம், தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டும், ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே, காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே, அனுர அரசே உங்களின் வாக்குறுதிகள் பொய்யா, எமது கடல் எமக்கு வேண்டும், உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார், மற்றும் செல்வராசா கஜேந்திரன், கனரத்தினம் சுகாஷ், நடராஜர் காண்டீபன், ஐங்கரநேசன், தவராசா உள்ளிட்டவர்களும், மதத்தலைவர்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தையிட்டி, பலாலி, மயிலிட்டி, கேப்பாபிலவு உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தை இழந்தவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிட்டு பூங்காவை பேரணி அடைந்ததும் அங்கு தமிழ் மக்களின் நீதிக்கான குரல் எனும் தொனிப்பொருளில்- உள்ளகப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கின்றோம், அனைத்துலக விசாரணையை ஐ.நா.பொறுப்பேற்க வேண்டும்- என்பதை வலியுறுத்தும் வகையில் பிரகடனக் கூட்டம் நடைபெற்றது.
அனைத்துலக நீதி விசாரணை கோரும் பிரகடனத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ் வாசித்தார்.
தொடர்ந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஐங்கரநேசன், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் வட,கிழக்கு அமைப்பின் தலைவி கனகரஞ்சினி உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.
இங்கு வெளியிடப்பட்ட பிரகடனத்தில்,
செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கான அனைத்துலக நீதி விசாரணை பொறிமுறை வேண்டும்:
தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணைப் பொறிமுறையை முற்றாக நிராகரிப்பதுடன், சுயாதீனமான, பாரபட்சமற்ற அனைத்துலக குற்றவியல் விசாரணை உடனடியாக ஆரம்பிக்கப்படல் வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதிகோரும் உள்ளகப் பொறிமுறைகளை நாம் முற்றாக நிராகரிப்பதுடன், அதற்கான அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.
அரசியல் கைதிகளின் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
வடக்கு–கிழக்கு தமிழர் தாயகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையிலான இராணுவமயமாக்கல் அகற்றப்படல் வேண்டும்.
தமிழினப் படுகொலை மீள நிகழாமல் இருப்பதனை உறுதிப்படுத்தவும், தொடரும் கட்டமைப்புசார் இனவழிப்பை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தவும், நிலையான இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் – சிறிலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பு முற்றாக நீக்கப்பட்டு, தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான தீர்வு எட்டப்படுவதனை அனைத்துலக சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.








