இந்திய, சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்
சிறிலங்கா மற்றும் இந்தியக் கடற்படைகளுக்கு இடையில் ஆண்டு தோறும் நடத்தப்படும் இருதரப்பு கடற்படைப் பயிற்சியான SLINEX 2026- கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பமாகவுள்ளது.
இந்தியாவின் விசாகப்பட்டினத்தில், செப்ரெம்பர் 14ஆம் நாள் (நாளை) முதல் 18 ஆம் நாள் வரை- ஐந்து நாள்கள் இந்தக் கூட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா கடற்படையின் எஸ்.எல்.என்.எஸ் சிந்துரால என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், கடந்த 11ஆம் நாள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.
இரு கடற்படைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் தொழில்முறை அறிவு மற்றும் நிபுணத்துவப் பரிமாற்றத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு, SLINEX கூட்டுப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

