3 மாதங்களில் சிறிலங்கா கடற்படைக்கு 6 இலட்சம் டொலர் வருமானம்
அனைத்துலக வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் சிறிலங்கா கடற்படை 3 மாதங்களுக்குள் 598,350 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வணிக கப்பல்களுக்கான பாதுகாப்பு சேவைகளை மேற்பார்வையிடவும் நிர்வகிக்கவும், சிறிலங்கா கடற்படைக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், 2025 ஒக்டோபர் 3 ஆம் நாள் வெளியிடப்பட்ட அசாதாரண அரசிதழைத் தொடர்ந்து முதல் மூன்று மாதங்களில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திகாரம் மாற்றப்பட்ட மூன்று மாதங்களில், சிறிலங்கா கடற்படை 323 நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், இதன் மூலம் அரசாங்கத்திற்கு 598,350 அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்ததாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
முந்தைய அரசாங்கங்களின் கீழ், இந்த அதிகாரம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டதன் விளைவாக, அந்த நிறுவனங்கள், முழு வருமானத்தில், 20 சதவீதத்தை மட்டுமே சிறிலங்கா ரூபாவில் கடற்படைக்கு செலுத்தப்பட்டதாகவும் ரியர் அட்மிரல் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கடல்சார் பாதுகாப்பு சேவை முதன்முதலில் சிறிலங்கா கடற்படையால் 2009 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இதில் ஆயுத சேமிப்பு வசதிகளை நிறுவுதல் அடங்கும்.
துப்பாக்கிகளை சேமித்து வைப்பது, கப்பல்களுக்கு கொண்டு செல்வது மற்றும் கப்பல்களில் இருந்து மீட்டெடுப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் கடற்படைக்கு மட்டுமே உள்ளது.
வேறு எந்த தரப்பினராலும் அதைப் பயன்படுத்த முடியாது. இருந்தபோதிலும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இந்த சேவையை ஒரு தனியார் நிறுவனத்திற்கு மாற்றினார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றதைத் தொடர்ந்து,2025 ஜூனில் எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவிற்கு அமைய, கடற்படை அந்த அதிகாரத்தை மீட்டெடுப்பதற்கு வழி வகுத்தது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
