கோத்தாவுக்கும் பீல்ட் மார்ஷல் பதவிஉயர்வு வழங்கக் கோருகிறது பொது பலசேனா
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று பொது பலசேனவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, வரும் 22ம் நாள் சிறிலங்கா அதிபரால், பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இந்தநிலையிலே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், முப்படைகளுக்கும் தலைமை தாங்கிய, கோத்தாபய ராஜபக்சவும், பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்பட வேண்டும் என்று பொது பலசேனவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், கோரியுள்ளார்.
அத்துடன், சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் வசந்த கரன்னகொடவும், எயர் மார்ஷல் றொசான் குணதிலகவும், இதேபோன்று பீல்ட் மார்ஷலுக்கு நிகரான பதவிக்கு தரமுயர்த்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா இராணுவத்தில் லெப்.கேணல் தர அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.