நாமல் தலைமையிலான பொதுஜன பெரமுன குழுவினர் இந்தியாவுக்கு அழைப்பு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தலைமையிலான, சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் குழுவொன்று இந்தியாவின் குடியரசு நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக ஒடிசாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
ஜனவரி 26 ஆம் நாள் நடைபெறவுள்ள இந்திய குடியரசு நாள் நிகழ்வில் பங்கேற்பதற்கு, இந்திய அரசாங்கம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அழைப்பை ஏற்று, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, சித்ரல் பெர்னாண்டோ, சமித்ரினி கிரியெல்ல, சதுரு கலப்பதி மற்றும் பிரசாத் சிறிவர்தன மற்றும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான இந்திக அனுருத்த, சஞ்சீவ எதிரிமன்ன மற்றும் சம்பத் அதுகோரள மற்றும் பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மிலிந்த ராஜபக்ச ஆகியோர் ஒடிசா செல்லவுள்ளனர்.
இந்த பயணத்தின் போது, உலகின் முன்னணி பேரிடர் முகாமைத்துவ நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒடிசா பேரிடர் முகாமைத்துவ மையத்திற்கும், இந்தக் குழு கண்காணிப்பு பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.
அசோக மன்னர் காலத்தைச் சேர்ந்த பௌத்த தொல்பொருள்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்திற்கு முன்னதாக, இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவை, அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன குழுவினர், சந்தித்துள்ளனர்.

