சிறிலங்கா அதிபரிடம் விடை பெற்றார் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து விடைபெற்றுக் கொண்டுள்ளார்.
சிறிலங்காவில் இராஜதந்திர பணிகளை முடித்துக் கொண்டு ஜனவரி 16 ஆம் நாள் ஜூலி சங் கொழும்பில் இருந்து புறப்படவுள்ளார்.
இந்த நிலையில் அவர் நேற்று சிறிலங்கா அதிபரை அவரது செயலகத்தில் சந்தித்து விடைபெற்றார்.
இதன்போது, அமெரிக்க-சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்துவதில் ஜூலி சங்கின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இருதரப்பு ஒத்துழைப்பை வளர்ப்பதில் அவரது முன்னோடிப் பங்களிப்பைப் பாராட்டிய அவர், அண்மைய பேரிடருக்குப் பின்னர் அமெரிக்காவின் உதவியை விரைவாக ஒருங்கிணைத்ததற்கும், அனைத்துலக நாணய நிதியத்துடனான சிறலங்காவின் முக்கியமான பேச்சுவார்த்தைகளின் போது அவர் அளித்த ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
