இந்திய இராணுவத் தளபதி சிறிலங்காவுக்குப் பயணம்
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எதிர்வரும் 7ஆம் நாள் தொடக்கம், 8ஆம் நாள் வரை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நாளை ஐக்கிய அரபு எமிரேட்சுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ள அவர், எதிர்வரும் 7ஆம் திகதி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என இந்திய இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
அவர், சிறிலங்கா இராணுவத்தால் மரியாதை அணிவகுப்புடன் வரவேற்கப்படுவார்.
இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா இராணுவத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் போன்ற மூத்த இராணுவ பிரமுகர்கள் மற்றும் சிவில் தலைவர்களுடன் இந்திய இராணுவத் தளபதி முக்கியமான சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்காவில் நடைபெறும் கலந்துரையாடல்கள் பயிற்சி ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆகியவற்றை மையப்படுத்தியதாக இருக்கும்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்குள் உறுதித்தன்மையைப் பேணுவதில் பகிரப்பட்ட முன்னுரிமைகளை வலியுறுத்தும்.
தனது செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, ஜெனரல் திவேதி புத்தலவில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் உரை நிகழ்த்துவார்.
இந்த பயணத்தின் ஒரு கட்டமாக, ஜெனரல் திவேதி சிறிலங்காவில் உயிரிழந்த இந்தியப்படையினரின் நினைவுச்சின்னத்தில் அஞ்சலி செலுத்துவார்.
மேற்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துதல் மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக இந்தப் பயணம் அமைந்துள்ளது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
