வெனிசுவேலா விவகாரம்- ஜேவிபி நிலைப்பாடு வேறு, அரசாங்கத்தின் நிலைப்பாடு வேறு
அனைத்துலக சட்டம் மற்றும் ஐ.நா. சாசனம் மீறப்படுவது குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்வதற்க, ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்திற்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
வெனிசுவேலாவில் அமெரிக்காவின் இராணுவத் தலையீடு மற்றும் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக, கொழும்பில் இன்று நடந்த ஊடகச் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் விளக்கமளித்துள்ளார்.
“ஐ.நா. சாசனம் மற்றும் அனைத்துலக சட்டத்தின்படி, அனைத்து நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும் இந்தக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
அதன்படி, நாளை அவசரமாக ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் தாமதமின்றி நடத்தப்பட வேண்டும் என்று நாங்களும் முன்மொழிந்துள்ளோம்.
ஐ.நா. சாசனம் மற்றும் அதன் அடிப்படைக் கொள்கைகளை மீறுவதற்கு எதிராக ஐ.நா. பொதுச் சபையிலும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நடவடிக்கைகளை கடுமையாகக் கண்டித்து ஜே.வி.பி வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அரசியல் கட்சிகள் அரசாங்கத்திலிருந்து வேறுபட்டவை என்றும், அவை தங்கள் சொந்தக் கருத்துக்களைக் கொண்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
