இந்தியா செய்யும் உதவிகளை அயல்நாடுகள் மதிக்க வேண்டும்-ஜெய்சங்கர்
இந்தியா, அயல் நாடுகளின் உறவை மட்டுமே விரும்புகிறது, அந்த நாடுகளுக்கு நாம் செய்யும் உதவியை அவர்கள் மதிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு நாடுகளில், இந்தியா குறித்த தவறான பார்வை உள்ளது. அதை மாற்ற, நாம் தொடர்ந்து தெளிவாகவும், நேர்மையாகவும், அவர்களுடன் உரையாட வேண்டும்.
இந்த உலகில் எதுவும் தனித்து இல்லை. நாம் மேற்கு நாடுகளை ஒதுக்கவோ வெறுக்கவோ முடியாது. அவர்களின் கூட்டாண்மையும் முக்கியம்.
பொதுவாக, ஒவ்வொரு நாடும் உள்நாட்டில் வளர்வதுடன் வெளிநாடுகளிலும் வளர வேண்டும்.
அயல் நாடுகளை அரவணைத்து அவர்களுடன் வளர்வதுதான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் இராஜதந்திரம்.
நாம், அயல் நாடுகளான பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், சிறிலங்கா போன்றவற்றுடன் உறவையும், நட்பையும் பேணுகிறோம்.
அந்த நாடுகள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் போது, முதல் ஆளாக உதவி செய்கிறோம்.
அதை அந்த நாடுகளும் மதிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
நல்ல எண்ணமும், விரோத எண்ணமும் சமரசம் செய்துகொள்ள முடியாது.
எமது மக்களின் பாதுகாப்புக்காகவும் அமைதிக்காகவும் எதை செய்ய வேண்டுமோ அதை கண்டிப்பாக செய்வோம். இதுதான் எமது நிலைப்பாடு என்றும் ஜெய்சங்கர் மேலும் கூறியுள்ளார்.
