மேலும்

ரணில் குறித்து விசாரிக்க சட்டமா அதிபருக்கு தெரியாமல் பிரித்தானியா சென்றது சிஐடி

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வூல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் அனுப்பியதாகக் கூறப்படும் அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராய ஐந்து பேர் கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று பிரித்தானியா சென்றுள்ளது.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள்  பெறப்படாமல் அல்லது சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்படாமல் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த குழுவின் பிரித்தானிய வருகை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம், இருட்டில் இருப்பதாகவும், இந்தக் குழு புறப்படுவதற்கு முன்னர்,  விசாரணைக்குப் பொறுப்பான மூத்த குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்  சட்டமா அதிபரிடம் இருந்து  எந்த அறிவுறுத்தல்களையும் கோரவில்லை என்றும் கூறப்படுகிறது.

பிரதி காவல்துறை மா அதிபர் தலைமையிலான அந்தக் குழுவில், உதவி காவல்துறை  கண்காணிப்பாளர் ஒருவருரும்,  தலைமை ஆய்வாளர் ஒருவரும்,  இரண்டு இளநிலை அதிகாரிகளும், இடம்பெற்றுள்ளனர்.

ஐந்து நாள் பயணமாக  இவர்கள், இந்த வார தொடக்கத்தில் பிரித்தானியா சென்றுள்ளனர்.

இந்தப் பயணம் குறித்து சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா உள்ளிட்ட சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உயர் மட்டங்களில் உள்ளவர்களுக்கு, தெரியாது என்று சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்டமா அதிபர் திணைக்களத்திற்குத் தெரியாமல், இந்தக் குழுவை சுயாதீனமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர், நாளை பிரித்தானியாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர், சரோஜா சிறிசேனவிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளனர்.

2023ஆம் ஆண்டு மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவிற்காக, ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட இரண்டு நாள் பயணத்தின் போது, ​​16.6 மில்லியன் ரூபா பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது ஒரு தனிப்பட்ட பயணம் என்று  குற்றப் புலனாய்வுப் பிரிவு  கூறுகிறது.

இது தொடர்பாக  ரணில் விக்ரமசிங்க ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

எனினும் இந்தப் பயணம் அதிகாரபூர்வ அழைப்பின் பேரில் இடம்பெற்ற அதிகாரபூர்வ பயணம் என, ரணில் விக்ரமசிங்க தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *