விமானப்படையின் எம்.ஐ.-17 உலங்குவானூர்திகளை பழுதுபார்க்கும் ஏலத்தில் சர்ச்சை
சிறிலங்கா விமானப்படையின், நான்கு எம்.ஐ.-17 உலங்குவானூர்திகளை பழுதுபார்த்து புதுப்பிக்கும், ஏலம் வழங்கப்பட்டது தொடர்பாக,சர்ச்சைகள் எழுந்துள்ளன.
பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் வின்ஸ்லி டிபென்ஸ் குழுவின் இன் உள்ளூர் முகவரான செகுரா டெக் லங்கா நிறுவனத்திற்கு இந்த ஏலம் வழங்கப்பட்ட பின்னர், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கேள்விப் பத்திரத்திற்குத் தேவையான அனைத்து கட்டாய ஆவணங்களையும் நிறுவனம் பூர்த்தி செய்யவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து அமைச்சரவை ஊடக மாநாட்டில் கேள்வி எழுப்பப்பட்ட போது, பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தாலோசித்த பின்னர், ஒரு வாரம் கழித்து பதில் அளிப்பதாக, அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ, தெரிவித்திருந்தார்.
கேள்விப் பத்திர செயல்பாட்டில் 04 கட்டாய நிபந்தனைகள் உள்ளடங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
அதில், எந்தவொரு பழுதுபார்க்கும் பணிக்கும் உலங்குவானூர்தியின் உற்பத்தியாளரிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
இத்கமைய, பழுதுபார்ப்பு மேற்கொள்ளவதற்கு ஜோர்ஜியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடமிருந்து ஒப்புதல் தேவைப்பட்டது.
இருப்பினும், ஜோர்ஜியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடமிருந்து செகுராடெக் லங்கா நிறுவனம், முறையான ஒப்புதலைப் பெறவில்லை என்றும், பழுதுபார்ப்புகளுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மட்டுமே கூறி, இதனைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜோர்ஜியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கடிதத்தில், உலங்குவானூர்திகள் 2022 முதல் அதிகாரசபையில் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
04 உலங்குவானூர்திகளையும் பழுதுபார்ப்புக்கு சுமார் 18 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
