சிறிலங்கா குறித்து ஜெனிவாவில் இன்று வாக்கெடுப்பு – 27 நாடுகள் இணை அனுசரணை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இன்று முதல் அடுத்த 3 நாட்களும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிரித்தானியா தலைமையிலான அனுசரணை நாடுகளால் “சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்” எனும் தலைப்பில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை இரண்டாவது விடயமாக எடுத்துக் கொள்ளப்படும்.
இதன்போது, வாக்கெடுப்பு கோரப்பட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படும் அல்லது வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும்.
இந்த பிரேணைக்கு இதுவரையில் 27 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.
அல்பேனியா, ஒஸ்ரியா, கனடா, கோஸ்டாரிகா, குரோஷியா, எஸ்தோனியா, ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லிச்சென்ஸ்டீன், லக்சம்பர்க், மலாவி, மோல்டா, மொண்டினீக்ரோ, நெதர்லாந்து , நியூசிலாந்து, வடக்கு மசிடோனியா, நோர்வே, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெய்ன், சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் இணை அனுசரணையில் இந்த திருத்தப்பட்ட தீர்மான வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையின் முதல் வரைவு கடந்த மாதம் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட போது, “நாடாளுமன்றத்தில் தனது தொடக்க உரையில், பல தசாப்தங்களாக பிளவுபடுத்தும் இனவெறி அரசியல் மற்றும் இன மோதல்களின் விளைவாக ஏற்பட்ட தீங்குகள் மற்றும் துன்பங்களை சிறிலங்கா அதிபர் ஒப்புக்கொண்டார்“ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட முறைசாராக் கலந்துரையாடலில் இன மோதல்கள் என்ற சொல் இடம்பெறுவதற்கு சிறிலங்காவும் அதன் நட்பு நாடுகளும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன.
இதன் பின்னர், வெளியிடப்பட்ட இரண்டாவது திருத்தப்பட்ட வரைவில், இனமோதல் எனும் சொற்பதம் நீக்கப்பட்டு, மோதல்கள் என்ற சொல் மட்டும் இடம்பெற்றிருந்தது.
இது, பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான கோரிக்கையை நீர்த்துப் போகச்செய்யும் எனக் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், ஒக்ரோபர் 1ஆம் திகதி வெளியிடப்பட்ட இறுதி வரைவில் இனமோதல்கள் என்ற பதம் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
“இனமோதல்களின் விளைவாக சிறிலங்கா முகங்கொடுத்த மிகமோசமான துன்பங்களை சிறிலங்ககா அரசாங்கம் அங்கீகரித்தமையையும், பிரிவினையை ஏற்படுத்தக் கூடிய இனவாத அரசியலுக்கு இடமளிக்காமல் இருப்பதற்கான அதன் கடப்பாட்டையும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதுடன் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான அர்ப்பணிப்பையும் வரவேற்கிறோம்” என 4 ஆவது விடயதானம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணை இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எடுத்துக் கொள்ளப்படும் போது, பிரேரணையின் உள்ளடக்கத்தை நிராகரித்து சிறிலங்கா எதிர்ப்பை வெளிப்படுத்தினாலும், வாக்கெடுப்பைக் கோராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.