அதிகரிக்கும் அமெரிக்க- சிறிலங்கா நெருக்கம்
2025 செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற பல நிகழ்வுகள் அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளில் ஏற்பட்டு வருகின்ற- தலைகீழ் மாற்றத்தை உணர்த்துவதற்கு போதுமானது.
சிறிலங்காவில் 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், போரில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து நம்பகமான- சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது.
அது நல்லிணக்கத்துக்கும், நீடித்த அமைதிக்கும், பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை ஆற்றுவதற்கும் மிகமிக முக்கியமானது என அமெரிக்க தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அமெரிக்காவின் அந்தக் கருத்தை அப்போது ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் செவி மடுக்கவில்லை.
அதுமாத்திரமின்றி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சீனாவுடன் நெருக்கமான உறவுகளையும் ஏற்படுத்த தொடங்கியது.
இது அமெரிக்காவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியதால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவை பொறுப்புக்கூற வைப்பதற்கான முயற்சிகளை ஆரம்பித்தது.
அப்போது அமெரிக்காவில் ஆட்சியில் இருந்த ஒபாமா அரசாங்கம், அதற்கான முயற்சிகளை தீவிரமாக முன்னெடுத்தது.
சமந்தா பவர், சூசன் ரைஸ், ரொபேர்ட் பிளாக் போன்ற அமெரிக்க இராஜதந்திரிகள் இந்த விடயத்தில் தீவிர கவனம் செலுத்தினார்கள்.
அந்த காலகட்டத்தில் சிறிலங்காவுடன் பாதுகாப்பு உறவுகளை அமெரிக்கா மட்டுப்படுத்தி வைத்திருந்தது.
ஆண்டு தோறும் வெளியிடப்படும், நாடுகளின் மனித உரிமைகள் நிலை, தீவிரவாதம் தொடர்பான நாடுகளின் அறிக்கை போன்றவற்றில், மோசமான மனித உரிமைகள் நிலை மற்றும் போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை நிறைவேற்றாத நிலையில்- சிறிலங்கா படையினருடன் அமெரிக்கா நெருக்கமான உறவுகளை பேணுவதில்லை என்றும், மட்டுப்படுத்தப்பட்டளவில் மனிதாபிமான உறவுகளை மாத்திரமே பேணிக் கொள்கிறது என்றும், அப்போது இராஜாங்க திணைக்களம் குறிப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தது.
ஆனால், இப்போது அமெரிக்காவின் அறிக்கைகளில் அவ்வாறான எந்த குறிப்பும் இடம்பெறுவதில்லை. ஏனென்றால்,நிலைமை மாறியிருக்கிறது.
அப்படியானால், அப்போது அமெரிக்கா எதிர்பார்த்தது போல, மனித உரிமைகள் நிலை முன்னேற்றம் அடைந்திருக்கிறதா, கடந்த கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் இடம்பெற்றிருக்கிறதா? நிச்சயமாக இல்லை.
ஆனாலும் அமெரிக்கா, சிறிலங்காவுடன் நெருங்கி செல்லத் தொடங்கியிருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்குள் அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் எப்படியான நிலையில் இருக்கின்றன என்பதை உணர்த்தக் கூடிய சில நிகழ்வுகளும், அவைபற்றிய அமெரிக்க இராஜதந்திரிகளின் பதிவுகளும் இந்த மாற்றத்தை தெளிவாக உணர்த்தும்.
“கடந்த வாரம் இலங்கையின் புதிய பொலிஸ் தலைவர் பிரியந்த வீரசூரியவுடன், அமெரிக்கா-சிறிலங்கா இடையேயான வலுவான கூட்டாண்மை குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
சைபர் குற்றங்கள், போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பது குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்.
இவை இலங்கையர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் முக்கிய விடயங்கள்” என கடந்த 15 ஆம் திகதி அமெரிக்க தூதுவர் தனது எக்ஸ் பக்கத்தில் இட்டிருந்த பதிவில் கூறியிருந்தார்.
அதேநாள் அவர் இட்டிருந்த மற்றொரு பதிவில், செப்ரெம்பர் வாரத்தில் இடம்பெற்ற பசுபிக் ஏஞ்சல்ஸ்-25 என்ற பெயரில், அமெரிக்க – சிறிலங்கா விமானப்படை மற்றும் கடற்படைகளுக்கு இடையில் நடந்த கூட்டு பயிற்சியின் நிறைவில், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வெளிப்படுத்திய கருத்துக்களை மையப்படுத்தியிருந்தது.
“பசிபிக் ஏஞ்சல்ஸ் 25 நிறைவு விழாவில், ஒரு செய்தி தெளிவாக இருந்தது, நாம் ஒன்றாக பயிற்சி பெற்று பதிலளிக்கும்போது, உயிர்களைக் காப்பாற்றுகிறோம், நம்பிக்கையை வளர்க்கிறோம்.
பேரிடர் மீட்பு முதல் கலாசார தொடர்புகள் வரை, இன்று நாம் உருவாக்குவது இந்தோ-பசுபிக்கின் நாளைய பாதுகாப்பையும் உறுதித்தன்மையையும் தான்” என அதில குறிப்பிட்டிருந்தார்.
செப்ரெம்பர் 16ஆம் திகதி, வெளியுறவு, அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தது பற்றிய அமெரிக்கத் தூதுவரின் குறிப்பில், இந்தோ-பசுபிக் கூட்டாளர்களாக, நாங்கள் பாதுகாப்பு மற்றும் திறந்த வர்த்தகத்தைப் பாதுகாக்கிறோம், பிராந்திய உறுதித்தன்மை மற்றும் செழிப்புக்கு முக்கியமான கடல் பாதைகளைப் பாதுகாக்கிறோம்.” எனக் கூறியிருந்தார்.
செப்ரெம்பர் 17ஆம் திகதி, அமெரிக்க தூதுவரின் எக்ஸ் பதிவில்,“ இந்தோ-பசுபிக் கூட்டாளர்களாக, நாங்கள் பாதுகாப்பு மற்றும் திறந்த வர்த்தகத்தைப் பாதுகாக்கிறோம்.
கொழும்பில், சிறிலங்கா, பங்களாதேஷ், மாலைதீவுகள் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன், பயங்கரவாதம் மற்றும் பேரழிவு ஆயுதங்கள் தொடர்பான அமெரிக்க கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்தேன்.
பயங்கரவாதம் மற்றும் பேரழிவு ஆயுதப் பெருக்கத்தைத் தடுக்க பாதுகாப்பு அச்சுறுத்தல் குறைப்பு ஏஜென்சி மற்றும் எவ்பிஐ புலனாய்வாளர்கள், ஆய்வாளர்கள், எல்லை/சுங்க அதிகாரிகள் மற்றும் வழக்குத்தொடுநர்களை அதில் ஒன்றிணைத்தேன்.
இன்று நாம் உருவாக்குவது நாளைய பகிரப்பட்ட பாதுகாப்பைத்தான்” என்று குறிப்பிட்டிருந்தார்.
செப்ரெம்பர் 19ஆம் திகதி அமெரிக்கத் தூதுவர், தியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவ பயிற்சி அகாடமியைப் பார்வையிட்டது மற்றும் அதன் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ். மெதகொடவுடன் சந்திப்பு பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
“பயிற்சி மையத்தின் தளபதியுடனும், இளம் பயிற்சி அதிகாரிகளுடனும், பெறுமதி மிக்க கலந்துரையாடலை மேற்கொண்டேன்.
இந்த இளம் அதிகாரிகள் நாளைய தலைவர்கள், மேலும் பரஸ்பர மரியாதை மற்றும் தகுதியை அடிப்படையாகக் கொண்ட எமது பகிரப்பட்ட பாதுகாப்பை வலுப்படுத்தும் சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது” என்று அவர் கூறியிருக்கிறார்.
அதேவேளை, செப்ரெம்பர் 17ஆம் திகதி அமெரிக்க தூதரகத்தின் எக்ஸ் பதிவில்,
“திருகோணமலையிலுள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் ஒரு அதிநவீன ஆங்கில மொழி ஆய்வுகூடத்தினை சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து நாங்கள் திறந்து வைத்தோம்.
சர்வதேச கடற்படை நடவடிக்கைகளின் பொதுவான மொழியில் தொடர்பாடல்களை மேற்கொள்ளல் மற்றும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்கை பராமரிப்பதற்காக, இது உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று நாம் ஒன்றிணைந்து எதை உருவாக்குகிறோமோ அது நாளைய எமது பகிரப்பட்ட பாதுகாப்பின் ஒரு அடித்தளமாகும்.“ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோல, செப்ரெம்பர் 19ஆம் திகதி, “விளக்கங்களைப்பெற்றுக் கொள்வதற்காகவும், கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காகவும் இந்தவாரம் மத்தள சர்வதேச விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் சிறிலங்கா கடற்படையின் எஸ்எல்என்எஸ் கவன்திஸ்ஸ கடற்படைத் தளம் ஆகியவற்றிற்கு அமெரிக்கத் தூதரகத்தின் துணைத் தூதுவர் ஹொவெல் மேற்கொண்ட பயணம் குறித்த ஒரு பதிவை அமெரிக்க தூதரகம் வெளியிட்டது.
அதேதினம் மற்றொரு பதிவில், “எமது பங்காளர்கள் பாதுகாப்பாக இருக்கும்போது, அமெரிக்கா மிகவும் பாதுகாப்பாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், அமெரிக்க பசுபிக் இராணுவத்துடன் இணைந்து சிறிலங்கா இராணுவத்தின் பொறியியலாளர்கள் வெடிபொருள் செயலிழக்கச் செய்யும் முதல் கட்ட கற்கை நெறியினை நிறைவு செய்த நிகழ்வில், அமெரிக்கத் துணைத் தூதுவர் ஜேன் ஹொவெல் மற்றும் பாதுகாப்பு அதிகாரி லெப். கேணல் மத்யூ ஹவுஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் என்றும் கூறப்பட்டிருந்தது.
பாதுகாப்பான சிறிலங்காவையும், எம்மனைவருக்கும் மிகவும் பாதுகாப்பான ஒரு இந்தோ-பசுபிக் பிராந்தியத்தினையும் கட்டியெழுப்புவதற்கு இது உதவும் என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.
இந்த பதிவுகள் அனைத்தும் சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உருவாகி இருக்கின்ற மிக நெருக்கமான பாதுகாப்பு உறவுகளின் பரிமாணத்தை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
இந்த பாதுகாப்பு உறவுகள் நிகழ்காலத்தை மையப்படுத்தியவை மாத்திரமல்ல, எதிர்காலத்தை மையப்படுத்தியவை என்பதை அமெரிக்க தூதுவர் தனது எக்ஸ் பதிவுகளில் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு இந்திய பெருங்கடலின் பாதுகாப்பு முக்கியமானது. இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்புக்கு இலங்கைத் தீவு மிக மிக முக்கியமானது.
ஆக, அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் சிறிலங்காவின் பாதுகாப்புக்கும், மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
அதனால் தான் அமெரிக்கா சிறிலங்காவுடனான பாதுகாப்பு உறவுகளை மனித உரிமை கரிசனைகளை தாண்டி, அவற்றைப் புறக்கணித்து முன்னோக்கி நகர்த்துவதில் ஆர்வம் காட்டுகிறது.
அப்படியானால் முன்னர் அமெரிக்கா கூறியது எல்லாம் பொய்யா? மனித உரிமைகள் பற்றி வெளிப்படுத்திய கரிசனைகள் அனைத்தும் பொய்யானதா?
நிச்சயமாக அந்தக் கரிசனைகள், அமெரிக்காவின் நலன்களை மையப்படுத்தியவை தான்.
அமெரிக்காவிடம் போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான பல செய்மதி படங்களும் ஆவணங்களும் சான்றுகளும் இருப்பதாக சொல்லப்படுகின்ற போதும், அவற்றில் எதையுமே ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின், சிறிலங்கா தொடர்பான ஐ.நா செயற்திட்டத்தில் கையளிக்கப்படவில்லை.
ஏனென்றால் அமெரிக்கா அதனை விரும்பவில்லை.
சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்களை கொடுப்பதற்கான ஒரு உத்தியாகவே பொறுப்புக்கூறல், மனித உரிமை விவகாரங்களை அது பயன்படுத்தியதா என்ற சந்தேகங்கள் இப்போது எழுகிறது.
எந்த இராணுவ கட்டமைப்பு மீது அமெரிக்கா போர்க்குற்றம் சாட்டியதோ அதே இராணுவ கட்டமைப்பை அமெரிக்கா இன்று வலுப்படுத்துகிறது, ஆதரிக்கிறது.
அந்த இராணுவ முகாம்களுக்குச் சென்று அமெரிக்க தூதுவர் ஒத்துழைப்புகள் தொடர்பாக ஆராய்கிறார். இந்த ஒத்துழைப்பு மட்டங்களிலும் விரிவடைந்து கொண்டிருக்கிறது.
இது அமெரிக்காவையும் சிறிலங்காவையும் பாதுகாப்பு ரீதியாக மிக நெருக்கமான கட்டத்திற்கு கொண்டு சென்று விட்டது.
சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் சிறிலங்கா நெருங்கிய ஒத்துழைப்புக்களை கொண்டிருந்தாலும் அவற்றைத் தாண்டி அமெரிக்காவுடன் பாதுகாப்பு உறவுகள் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கின்றன.
இந்த ஒத்துழைப்பு தமிழர்களை பொறுத்தவரையில் நம்பிக்கை ஊட்டக்கூடிய ஒரு விடயம் அல்ல.
ஏனென்றால், பொறுப்புக்கூறலையும் நீதியையும் மனித உரிமைகளையும் வலியுறுத்திய முக்கியமான தரப்பான அமெரிக்கா, அதில் இருந்து விலகி சிறிலங்கா அரசுடன் ஒத்துழைத்து நிற்பது, இந்த முயற்சிகளை பலவீனப்படுத்தும் என்ற அச்சத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
-ஹரிகரன்
வழிமூலம்- வீரகேசரி வாரவெளியீடு (28.09.2025)