மேலும்

குர்திஷ் மக்களின் துயர் மிகுந்த நெடிய பயணம்: வடுக்களும், நம்பிக்கையும்

வரலாற்றுப் பக்கங்களில் ஒரு சோக அத்தியாயமாக எழுதப்பட்டிருக்கும், குர்திஷ் மக்களின் வாழ்வும் , அதனோடு பின்னிப் பிணைந்த விடுதலைக்கான ஒரு நெடிய போராட்டமும், இப்போது, ஒரு புதிய பாதையை நோக்கிச் செல்கிறது;இன்னும் சொல்லப்போனால் ,செல்ல வைக்கப்படுகிறது .

பல தசாப்த கால ஆயுதப் போராட்டத்திற்குப் பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க குர்திஷ் தேசிய விடுதலை இயக்கம், அமைதியான அரசியல் தீர்வைக் காணும் நோக்கத்துடன், தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, துருக்கி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பி இருக்கிறது.

இது ஒரு சாதாரண நிகழ்வல்ல; இழந்த காலத்துக்கான ஈடுகொடுக்க முடியாத வலியையும், எதிர்காலத்துக்கான தீவிர நம்பிக்கையையும் சுமந்து நிற்கும் ஒரு இக்கட்டான தருணம்.

இந்த பேச்சுவார்த்தைகளின் அடையாளமாக, ஜூலை 12 சனிக்கிழமை, குர்திஷ் மலைகளின் கரடுமுரடான பாதைகளிலிருந்து ஆண்களும் பெண்களுமாக 30 போராளிகள் கீழே இறங்கினர்.  குர்திஷ் மக்களின் மரியாதைக்குரிய தலைவர் அப்துல்லா ஒசோலானின் (Abdullah Ocalan) வேண்டுகோளை ஏற்று, இவர்களை வழிநடத்தியவர், தோழர் பேஸே கோசத்.

போர்ச் சத்தங்கள் அடங்கி, அமைதியின் சலசலப்பு எழத் தொடங்கும் இந்த நிகழ்வு, ஓரு புதிய சகாப்தத்தின் விடியலாகப் பரப்புரை செய்யப்படுகிறது.

இது வெறும் ஆயுதக் களைவு மட்டுமல்ல; எண்ணற்ற தியாகங்களும் இரத்தமும் கண்ணீரும் நிறைந்த கடந்த காலத்தை , ஒரு புதிய எதிர்காலத்தை நோக்கிய ஒரு துணிச்சலான பயணத்தில்  பணயம்  வைக்கும் ஒரு நடவடிக்கையாகும்.

குர்திஷ் மக்களின் துயரம், என்பது  காலனித்துவ ஆக்கிரமிப்புகளாலும், தொடர்ச்சியான இனப்படுகொலைகளாலும் வரலாற்றின் பக்கங்களில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. ஒரு காலத்தில் பரந்து விரிந்த குர்திஷ் தாயகம் – துருக்கி, ஈரான், ஈராக், சிரியா என நான்கு நாடுகளுக்கு இடையே பிரித்துப் பங்கு போடப்பட்டது.

தங்கள் சொந்த நிலத்திலேயே, குர்திஷ் மக்கள் சிறுபான்மையினராக ஆக்கப்பட்ட சோகம், உலக வரலாற்றில் மிக அரிதாகவே காணப்படுகிறது. இது அவர்களின் சமூக, கலாச்சார, மற்றும் அரசியல் அடையாளத்திற்குப் பலத்த அடியாக விழுந்தது.

இதுமட்டுமல்லாமல், குர்திஷ் விடுதலை அமைப்புகளுக்குள்ளேயே பிளவுகளையும், பகையையும், குரோதத்தையும் தூண்டிவிடும் முயற்சிகளும் அரங்கேறின. இது அவர்களின் வலிமையைப் பலவீனப்படுத்தி, ஒற்றுமையைச் சிதைத்தது.

சொந்த நிலத்திலேயே அகதிகளாக, தங்கள் கலாச்சார உரிமைகளுக்காகவும், சுயநிர்ணயத்துக்காகவும் போராடும் நிலையிலேயே அவர்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்தனர். அவர்களின் வலி, ஒரு நிலத்தின் ஏக்கமாய், ஒரு மொழியின் அழுகையாய், ஒரு மக்களின் தணியாத தாகமாய் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

                                                                அப்துல்லா ஒசோலான் சக தோழர்களுடன்

 இன்றைய புதிய நவ தாராளவாத உலகில் “நீதி என்பது ஆயுத வியாபாரிகளிடமும் உலக முதலாளித்துவத்திடமும் சிறைப்பட்டு கிடக்கிறது.

சர்வதேச அளவில் ஆயுத விற்பனை, புவிசார் அரசியல் நலன்கள், மற்றும் பொருளாதாரப் போட்டி ஆகியவை குர்திஷ் மக்களின் போராட்டத்தை வெறும் சதுரங்கப் பலகையாகப் பயன்படுத்தின. அவர்களின் நியாயமான கோரிக்கைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு, அதிகார வர்க்கத்தின் நலன்களுக்காகப் பலிகிடந்தன.

நீதி, சில சமயங்களில், காகிதத்தில் எழுதப்பட்ட வார்த்தைகளாகவே மாறிப் போனது; நடைமுறையில், அது வல்லரசுகளின் வியூகங்களாலும், ஆயுத விற்பனை லாபங்களாலும் சிதைக்கப்பட்டது. இந்த அரசியல் விளையாட்டுகளின் விளைவாக, குர்திஷ் மக்களின் துயரம் மேலும் ஆழமடைந்தது.

ஆனால், இத்தனை வலிகளுக்கும் மத்தியிலும், குர்திஷ் மக்கள் தங்கள் உறுதிப்பாட்டை ஒருபோதும் கைவிடவில்லை.

தங்களின் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்ற அவர்களின் ஆழமான கனவு, இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு புதிய திசையை நோக்கி நகர வைக்கப்படுகிறது..

ஆனால், இது ஒரு எளிதான பயணமல்ல. பல ஆண்டுகளாகப் புரையோடிப்போன பகைமையும், நம்பிக்கையின்மையும் பேச்சுவார்த்தை மேசையில் சவால்களை எழுப்பக்கூடும்.

இரு தரப்பினரும் பரஸ்பர மரியாதை, புரிதல், மற்றும் ஒரு உண்மையான நல்லெண்ணத்துடன் அணுகினால் மட்டுமே, ஒரு நீடித்த சமாதான தீர்வு சாத்தியமாகும்.

குர்திஷ் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட்டு, அவர்களின் தனித்துவம் பாதுகாக்கப்பட்டு, அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் சமாதானத்துடனும், கண்ணியத்துடனும் வாழும் ஒரு எதிர்காலம் உருவாக வேண்டும் என்பதே உண்மையான அமைதியையும் ஜனநாயகத்தையும் விரும்பும் அனைவரினதும்  எதிர்பார்ப்பு.

இந்த முயற்சி வெற்றிபெற்றால், அது மத்திய கிழக்கு அமைதிக்கு ஒரு முன்னோடியாக அமையும்.

குர்திஷ் மக்களின் கண்ணீரும், தியாகமும் நிறைந்த இந்தப் பயணம், இறுதியாக அமைதியின் கரையை அடையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • சிவா சின்னப்பொடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *