வேலணை, வலிகாமம் தென்மேற்கு சபைகளில் ஆட்சியமைத்தது தமிழ் அரசு
வலிகாமம் தென்மேற்கு மற்றும் வேலணை பிரதேச சபைகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைத்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் 22 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட வேலணை பிரதேச சபையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி- 8, ஈபிடிபி- 3, தமிழ் தேசிய பேரவை- 02, தேசிய மக்கள் சக்தி- 04, தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மூன்று சுயேச்சைக் குழுக்கள் தலா ஒவ்வொரு ஆசனங்களைக் கொண்டிருக்கின்றன.
இன்று முற்பகல் நடந்த வேலணை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும், பிரதி தவிசாளர் தெரிவின் போது, தமிழ் அரசுக் கட்சியின் சார்பில், சிவலிங்கம் அசோக்குமார் தவிசாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டார்.
வேறெவரும் போட்டியிடாத நிலையில், சிவலிங்கம் அசோக்குமார் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
சுயேட்சைக் குழுவின் உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் வெளிநடப்பு செய்தார்.
பிரதி தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் கணபதிப்பிள்ளை வசந்தகுமாரன் ஒரு மனதாக தெரிவு செய்யப்பட்டார்.
வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் ஆட்சியையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியது.
இன்று பிற்பகல் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்யும் அமர்வு இடம்பெற்றது.
இலங்கை தமிழரசு கட்சி சார்பில் 8 பேரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் 5 பேரும், தமிழ் தேசிய பேரவை சார்பில் 4 பேரும், தேசிய மக்கள் சக்தி சார்பில் 6 பேரும், ஈபிடிபி சார்பில் 2 பேரும், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஒருவரும் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் 2 பேரும் அங்கம் வகிக்கும் இந்தச் சபையில், தவிசாளர் பதவிக்கு கந்தையா யசீதனின் பெயரை தமிழ் அரசுக் கட்சியும், நாகராசா பகீரதனை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் முன்மொழிந்தன.
இதையடுத்து நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் கந்தையா யசீதன் 13 வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார் .
நாகராசா பகீரதனுக்கு 9 வாக்குகள் கிடைத்த நிலையில், தேசிய மக்கள் சக்தி நடுநிலை வகித்தது .
இலங்கை தமிழரசு கட்சியின் பேரின்பநாயகம் சுபாகர் பிரதித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.