போலி மருந்து மோசடி- அதிர்ச்சி தரும் ஆய்வுகூட பரிசோதனை முடிவு
மோசடியாக இறக்குமதி செய்யப்பட்ட இம்யூனோகுளோபுலின் மருந்தில் சேலைன் மற்றும் ஆபத்தான, தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் மட்டுமே இருந்தன என்றும், எந்த மருத்துவப் பொருட்களும் இல்லை என்றும் ஆய்வுகூடப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், 144 மில்லியன் ரூபாவுக்கு போலி இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி செய்யப்பட்ட மோசடி தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில், மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது. சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹகமகே ஜெர்மனி இரசாயன ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வக சோதனைகளின் முடிவுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
ஜெர்மன் ஆய்வகத்திற்கு சுமார் 200 மாதிரிகள் அனுப்பப்பட்டதாகவும், அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட இம்யூனோகுளோபுலின் மருந்தில் சேலைன் மற்றும் ஆபத்தான, தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் மட்டுமே இருந்தன என்றும், எந்த மருத்துவப் பொருட்களும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது என்றும் பிரதி சொலிசிட்ட ஜெனரல் கூறினார்.
இந்த தரமற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத மருந்து இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், சந்தேக நபர்களுக்கு எதிராக அடுத்த திங்கட்கிழமைக்குள் உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, குழந்தைகளுக்கானசர்ச்சைக்குரிய மருந்தை வழங்கிய ஆயுஷுலேம் பயோடெக் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் சுகத் ஜனக பெர்னாண்டோவுடன், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் எட்டு தொலைபேசி உரையாடல்களை நடத்தியுள்ளார்.
இந்த வழக்கில் மற்றொரு சந்தேக நபரான அப்போதைய சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளருடன் முன்னாள் அமைச்சர் ரம்புக்வெல்ல 31 தொலைபேசி உரையாடல்களை நடத்தியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மற்ற மருந்து விநியோகஸ்தர்களுடன் தொடர்பு கொண்டாரா என்பதைத் தீர்மானிக்க மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டன, ஆனால் அத்தகைய தொடர்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.