உள்ளூராட்சி உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கும் ஆளும்கட்சி
தமது கட்சியைச் சேர்ந்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களை, ஆளும்கட்சி பண வெகுமதி கொடுத்து விலைக்கு வாங்கியிருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
பதுளை மாவட்டம் ஹல்துல்முல்ல பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு நேற்று இடம்பெற்றது.
9 ஆசனங்களைப் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவுடன், இங்கு அதிகாரத்தை கைப்பற்றியது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தேசிய மக்கள் சக்தியினால் தவிசாளர் பதவிக்கு முன்நிறுத்தப்பட்டவருக்கு ஆதரவாக வாக்களித்த தமது கட்சியின் இரண்டு உறுப்பினர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக அவர்களுக்கு பண வெகுமதி கொடுக்கப்பட்டது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி, முன்னைய ஆட்சியாளர்களின் பாதையிலேயே பயணிக்கிறது என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.