மேலும்

சிறிலங்கா மீதான கண்காணிப்பு தொடரும் – கூட்டமைப்பிடம் உறுதியளித்த ஐ.நா அதிகாரி

TNA-jeffry feltman (2)சிறிலங்கா மீதான ஐ.நாவின் நெருங்கிய கண்காணிப்பும், ஈடுபாடும்  தொடரும் என்று  அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச்  செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட குழுவினரை  சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களின் பின்னரான அரசியல் நிலவரம் குறித்து இந்தச் சந்திப்பின் போது, ஐ.நா உதவி செயலாளருக்கு இரா.சம்பந்தன் எடுத்துக் கூறியுள்ளார்.

TNA-jeffry feltman (1)

அத்துடன், ”சிறிலங்கா அரசாங்கம் 2015இல் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதி செய்யும் வகையில், அதனுடன் அனைத்துலக சமூகம் நெருங்கிய ஈடுபாட்டை கொண்டிருக்க வேண்டும் .

அத்துடன், ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் காணப்பட்ட தேவையற்ற இழுத்தடிப்புகள் காரணமாக, அரசாங்கம் மீதும் அதன் கட்டமைப்புகள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள்.

மேலும் இழுத்தடிப்புகளின்றி இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதனை அனைத்துலக சமூகம் உறுதி செய்ய வேண்டும்.” என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக வழங்கி வரும் பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்த ஐ.நா உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன், சிறிலங்கா தொடர்பான ஐ.நா.வின் நெருங்கிய கண்காணிப்பும் ஈடுபாடும்,தொடரும் எனவும் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *