மேலும்

அரசியல்தீர்வுக்கு நிபுணத்துவ உதவிகளை வழங்கத் தயார் – ஐ.நா உதவிச்செயலர் உறுதி

Miroslav Jencaசிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கு உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் தேவையான நிபுணத்துவ உதவிகளை வழங்க ஐ.நா தயாராக இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஐ.நா உதவிச் செயலர் மிரொஸ்லாவ் ஜென்கா உறுதியளித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா உதவிச் செயலர் மிரொஸ்லாவ் ஜென்கா, நேற்று கொழும்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தப் பேச்சுக்களின் போது சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை, மற்றும் அமெரிக்க அனுசரணையில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ந்தும் ஐ.நா. வலியுறுத்த வேண்டும் என்று ஐ.நா உதவிச் செயலரிடம் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்தப் பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை.சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா உதவி செயலர், மிரொஸ்லாவ் ஜென்காவுடன், ஐ.நா.வின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான அரசியல் திணைக்கள பதில் அதிகாரி, மற்றும் கொழும்பிலுள்ள ஐ.நா.வதிவிட பிரதிநிதி அலுவலகத்தின் அதிகாரிகளும் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டனர்.

இந்தப் பேச்சுக்கள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தகவல் வெளியிடுகையில்,

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் ஐ.நா பொதுச்சபையின் 70ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக நியூயோர்க்கிற்கு சென்றிருந்த போது அரசியல் விவாகாரங்களுக்கான ஐ.நா உதவிச்செயலரை சந்தித்திருந்தார்.

இதன்போது இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்கான பேச்சுகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இருவருக்கு இடையிலும் கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது.

இதன்போது இனப்பிரச்சினை தீர்வுக்கான சில விடயங்களை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளதாகசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவரிடத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாகவே அவருடைய தற்போதைய பயணம் அமைந்துள்ளதாக எம்மிடத்தில் தெரிவித்தார்.

இணைந்த வடக்கு,கிழக்கில், அதியுச்ச அதிகாரங்கள் பகிரப்பட்டு, சமஷ்டி ஆட்சி முறையில் தமிழ் மக்கள் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் வாழக்கூடிய வகையிலான, நீடித்து நிலைத்திருக்கக் கூடிய தீர்வொன்றை எட்டுவதே, அரசியல் தீர்வு தொடர்பாக நாம் கொண்டுள்ள நிலைப்பாடு என்று அவருக்கு எடுத்துரைத்தோம்.

அது தொடர்பாக கவனம் செலுத்துவதாக குறிப்பிட்ட ஐ.நா. உதவி செயலர் உள்நாட்டிலேயே அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும், ஐ.நா அமைப்பு அதற்காக நிபுணத்துவ ஆலோசனை உட்பட அனைத்துவிதமான ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக குறிப்பிட்டார்.

அதையடுத்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை மற்றும் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஆகியவற்றில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குரிய சகல விதமான நடவடிக்கைகளையும், ஐ.நா தொடர்ந்தும் முன்னெடுப்பதுடன் அரசாங்கத்திற்கும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும் கோரினோம்.

நிரந்தர அரசியல் தீர்வு குறித்த விடயங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு சமாந்தரமாக, அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு, எமது மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட விடயங்களில் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளில் ஐ.நா. வின் பங்களிப்புக்கள் அவசியமாக காணப்படுகின்றன. அதனை முழுமையாக வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *