இன்று கொழும்புக்கு வரும் இந்திய கடற்படைக் கப்பல்கள் அணி
இரண்டு கடற்படைக் கப்பல்கள் மற்றும் ஒரு கடலோரக் காவல்படை கப்பலை உள்ளடக்கிய, இந்திய கடற்படையின் பயிற்சிப் படைப்பிரிவு ஒன்று, மூன்று நாள்கள் நல்லெண்ணப் பயணமாக இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளது.
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்த பயணம் அமைந்துள்ளது.
இந்திய கடற்படைக் கப்பல்களான ‘தீர்’ மற்றும் ‘சுஜாதா’, மற்றும் இந்திய கடலோரக் காவல்படைக் கப்பலான ‘சாரதி’ ஆகியவற்றை உள்ளடக்கிய முதல் பயிற்சிப் படைப்பிரிவு (1TS), கொச்சியில் உள்ள தனது தளத் துறைமுகத்திற்குத் திரும்புவதற்கு முன்னதாக, சீஷெல்ஸில் உள்ள போர்ட் விக்டோரியா மற்றும் மாலைதீவில் உள்ள மாலே ஆகிய இடங்களுக்குச் செல்லும் நீண்ட தூரப் பயிற்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக, ஒக்டோபர் 28ஆம் நாள் வரை கொழும்பில் தரித்திருக்கும்.
இந்தப் படைப்பிரிவு, இந்திய கடற்படை, இந்திய கடலோரக் காவல் மற்றும் நட்பு வெளிநாட்டுக் கடற்படைகளின் அதிகாரிப் பயிற்சியாளர்களுக்கு ஆரம்பகட்ட கடல் பயிற்சியை வழங்குவதற்குப் பொறுப்பாகும்.
இந்த நீண்ட தூரப் பயிற்சிப் பயணத்தில் ஐந்து சிறிலங்கா கடற்படை அதிகாரிப் பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.
திருகோணமலையில் உள்ள சிறிலங்கா கடற்படையின் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அதிகாரி பயிற்சி மாணவர்களுக்குக் கடல் பயணப் பயிற்சி மற்றும் நடைமுறை அனுபவத்தை வழங்குவதற்காக, முதல் பயிற்சிப் படைப்பிரிவின் ஒரு பகுதியான ஐ.என்.எஸ் தரங்கிணி, 2026 மார்ச் மாதம் சிறிலங்காவிற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து இந்தப் படைப்பிரிவின் வருகை அமைந்துள்ளது.
இந்தப் பயணத்தின் போது, இந்திய மற்றும் சிறிலங்கா கடற்படை அதிகாரி பயிற்சி மாணவர்கள் தொழில்முறை, பயிற்சி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள்.
திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் உள்ள இந்தியப் பயிற்சி மாணவர்களும், பயிற்சிக் கப்பல்களில் உள்ள சிறிலங்கா கடற்படைப் பயிற்சி மாணவர்களும் பங்கேற்கும் பரஸ்பரப் பயணங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த வருகையானது, இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கை மற்றும் ‘பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்’ எனும் தொலைநோக்குப் பார்மைக்கு ஏற்ப, இரு நாடுகளின் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படைகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
