நீதிமன்ற உத்தரவுக்கு காத்திராமல் விசாரணையை தொடங்க வேண்டும்
சந்தேகத்திற்குரிய புதைகுழிகள் தொடர்பான அகழ்வுகள் குறித்து நீதிமன்றங்கள் உத்தரவுகளை பிறப்பிக்கும் வரை காத்திருக்காமல், புலனாய்வு அமைப்புகள், விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவ ,
சந்தேகத்திற்குரிய பாரிய மனிதப் புதைகுழிகள் போன்ற எந்தவொரு வழக்கிலும் அகழ்வை மேற்கொள்வதற்கு நீதிமன்ற உத்தரவு தேவைப்பட்டாலும், அது நீதிமன்றங்களால் எடுக்கப்பட்ட முயற்சி அல்ல.
அதற்கு பதிலாக, தேவையான விசாரணைகளை மேற்கொண்டு, பின்னர் பொருத்தமான நீதிமன்ற உத்தரவுகளைப் பெறுவது காவல்துறை உள்ளிட்ட தொடர்புடைய புலனாய்வு நிறுவனங்களின் பொறுப்பாகும்.
முதற்கட்ட விசாரணைகள் மூலம் நிறுவப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளின் பேரில் மட்டுமே நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
விசாரிக்கப்பட்டு உண்மைகள் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டால், நீதிமன்றம் அகழ்வுகளை அனுமதிக்கும்.
இதுபோன்ற விடயங்களில் நீதிமன்றம் முன்முயற்சி எடுக்காது. எனவே, நீதிமன்றங்கள் உத்தரவுகளை பிறப்பிக்க முன்முயற்சி எடுக்கும் வரை சம்பந்தப்பட்ட தரப்பினர் காத்திருக்கக்கூடாது.
அவர்கள் நீதிமன்றங்களின் முன் உண்மைகளை வெளிப்படுத்தி உத்தரவுகளைக் கோர வேண்டும்.”என்றும் தெரிவித்துள்ளார்.