நிலந்த ஜயவர்தன காவல்துறை சேவையில் இருந்து நீக்கம்
சிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் தலைவர், மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர், நிலந்த ஜயவர்தன, காவல்துறை சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஒழுக்காற்று விசாரணையைத் தொடர்ந்து, அவரை, தேசிய காவல்துறை ஆணைக்குழு அதிகாரப்பூர்வமாக பணிநீக்கம் செய்துள்ளது.
ஆணைக்குழுவின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மேல்நீதிமன்ற நீதிபதி லலித் எக்கநாயக்க தலைமையில் இடம்பெற்ற போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அரச புலனாய்வு சேவையின் தலைவராகப் பணியாற்றிய நிலந்த ஜயவர்தன, 2024 ஜூலையில் தேசிய காவல்துறை ஆணைக்குழுவினால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருந்தார்.
அவருக்கு எதிரான விசாரணையின் முடிவில், நிலந்த ஜயவர்தனவை சேவையிலிருந்து நீக்க தேசிய காவல்துறை ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
2025 ஜூலை 4, ஆம் திகதி மூன்று பேர் கொண்ட தீர்ப்பாயத்தால் தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட முறையான ஒழுங்கு விசாரணை அறிக்கையின்படி, கட்டாய விடுப்பில் இருந்த நிலந்த ஜயவர்தன குற்றப்பத்திரிகையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஏழு குற்றச்சாட்டுகளிலும், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.