பருத்தித்துறை நகரசபையிலும் ஆட்சியமைத்தது தமிழ் தேசிய பேரவை
பருத்தித்துறை நகர சபையின் தவிசாளராக- மிதிவண்டிச் சின்னத்தில்- தமிழ்த் தேசிய பேரவையின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டக்ளஸ் போல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை நகர சபையின் தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்றுகாலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது தவிசாளர் பதவிக்கு தமிழ் தேசிய பேரவை சார்பில் டக்ளஸ் போல் முன்மொழியப்பட்டார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் தி.சந்திரசேகரின் பெயர் முன்மொழியப்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில், டக்ளஸ் போர் 7 வாக்குகளையும், சந்திரசேகர் 4 வாக்குகளையும் பெற்ற நிலையில் டக்ளஸ் போல் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
அதையடுத்து பிரதி தவிசாளர் பதவிக்கு தமிழ் தேசிய பேரவை சார்பில் முன்மொழியப்பட்ட தேவசிகாமணி இராசேந்திரன் 7 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வாக்கெடுப்புகளின் போது தேசிய மக்கள் சக்தி மற்றும் ஊசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். ஈபிடிபி உறுப்பினர் வெளிநடப்பு செய்திருந்தார்.
யாழ்ப்பாணத்தின் 17 உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியமைப்போம் என தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் கூறியிருந்த நிலையில், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைகளில் தமிழ் தேசிய பேரவை ஆட்சியமைத்துள்ளது.