ஐ.நா ஆய்வுக்கப்பலை அனுமதிப்பது குறித்து முடிவு இல்லை – விஜித ஹேரத்
ஐ.நா கொடியுடனான ஆய்வுக் கப்பலை சிறிலங்காவிற்குள் அனுமதிப்பது தொடர்பாக அரசாங்கம் இன்னமும் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
டொக்டர் பிரிட்ஜ் ஒவ் நான்சன்( Dr Fridtj of Nansen) என்ற ஆய்வுக் கப்பல் சிறிலங்காவில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதும் அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை.
இதனால் சிறிலங்கா பொருளாதார ரீதியாக பெருமளவில் இழப்புகளை எதிர்கொள்ளும் என்று ஐ.நா அதிகாரிகள் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டியிருந்தனர்.
எனினும், நாங்கள் இன்னமும் இறுதியான எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், அது குறித்த செயல்முறைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கான நடைமுறைகள் வகுக்கப்படும் வரை, இந்தக் கோரிக்கையை ஏற்க வழி இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அந்த நடைமுறையை ஆராய தற்போது ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், முதல் கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
நான்சென் என்ற அதிநவீன ஆய்வுக் கப்பல் தற்போது மொறிசியஸில் தரித்து நிற்கிறது.
சிறிலங்காவின் முந்தைய அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், ஜூலை 15 முதல் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை கடல் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்காக கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தது.
அதன்படி, கொழும்பு புறப்பட முன்னர் சிறிலங்கா விஞ்ஞானிகள் அந்தக் கப்பலில் ஏற்றப்படுவார்கள்.
சிறிலங்காவில் ஆய்வு முடிந்ததும், அது பங்களாதேசுக்கு பயணம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
கப்பல் கொழும்பில் இருக்கும்போது பங்களாதேஷ் விஞ்ஞானிகள் கப்பலில் ஏறுவார்கள் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலுக்கான அனுமதி வழங்கப்படா விட்டார் ஐ.நாவின் உணவு விவசாய நிறுவனத்தின் 1 மில்லியன் டொலர் நிதியை சிறிலங்கா இழக்க வேண்டியிருக்கும் என்றும், இதுபோன்ற இன்னொரு ஆய்வு 2030 வரை மேற்கொள்ளப்படாது என்றும் ஐ.நா எச்சரிக்கை விடுத்திருந்தது.