மேலும்

அனுரவின் ஆட்சியில் 70 கைதிகள் சட்டவிரோதமாக விடுதலை

சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு என்ற போர்வையில், 70 கைதிகள், சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக,  கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்,  துஷார உபுல்தெனியா  இன்று கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க முன்பாக, முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சில கைதிகள் அதிபர் பொது மன்னிப்பு பெற்றதைக் குறிக்கும் போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக, துஷார உபுல்தெனிய மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு நத்தார் பண்டிகையின் போது 57 கைதிகளும், 2025 சுதந்திர தினத்தின் போது 11 கைதிகளும் தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் – சட்டவிரோதமாக  விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் வெசாக் பௌர்ணமியின் போது, ​​நாடு முழுவதும் 29 சிறைகளில் இருந்து 338 கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் குறைந்தது இரண்டு பேர் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் குறிப்பிட்டார்.

சிறைச்சாலை மற்றும் சட்ட அமுலாக்க அமைப்புகளுக்குள் ஆழமான, முறையான தோல்வியை இந்த கண்டுபிடிப்புகள் பிரதிபலிக்கின்றன என்றும், சட்டவிரோத நடைமுறைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் வேரூன்றத் தொடங்கியுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மோசமான வலையமைப்புகளை அகற்றுவதில் சட்டமா அதிபர்  திணைக்களம் மற்றும் விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைக்குமாறும்,  அவர் நீதித்துறையை வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மூத்த சிறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளின் சொத்துக்கள் மற்றும் நிதி முதலீடுகள்  குறித்து தனித்தனி, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து சந்தேக நபரான – பதவி நீக்கப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை  நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *