அமெரிக்க – இந்தியா உயர்மட்டப் பேச்சில் சிறிலங்கா குறித்தும் கவனம்
வொசிங்டனில் கடந்த வாரம், அமெரிக்க- இந்திய உயர் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தைகளில், சிறிலங்கா விவகாரம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பர் ஆகியோர், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருடன் வொசிங்கடனில் இரண்டாவது அமெரிக்க- இந்திய 2+2 அமைச்சர்கள் மட்ட பேச்சுக்களை நடத்தினர்.
இந்தப் பேச்சுக்களின் பின்னர் கடந்த 18ஆம் நாள், கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சந்திப்பின் போது, தாங்கள் சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்திய நிலைமைகள் தொடர்பான மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
சிறிலங்கா தொடர்பாக விவாதிக்கப்பட்ட விடயம் என்னவென்று அவர் குறிப்பிட்டுச் கூறவில்லை.
என்றாலும், சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டதாக நம்பப்படுகிறது என, இராஜதந்திர வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளன.
சிறிலங்கா உள்ளிட்ட தெற்காசியாவில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீடுகள் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து கவலை வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.