மேலும்

மதம் பிடித்த பிராந்தியங்கள் -8

சர்வதேச அரங்கிலே அரசியல் மாற்றங்கள் பல்வேறு கோணங்களில் நிகழ்வது போல் தென்படுவதாக இருந்தாலும், அனைத்து நகர்வுகளும் மேலைத்தேய முதலாளித்துவ ஜனநாயக நலன்களை பாதுகாக்கும் வகையிலேயே இடம் பெற்று வருகிறது என்பதை, இந்த இறுதி எட்டாவது கட்டுரை பிரதிபலித்து நிற்கிறது.

மத்திய கிழக்கு,  மேற்காசியப் பிராந்தியத்திலும்  தெற்காசியப் பிராந்தியத்திலும் மட்டுமல்லாது,  மதத்தின் பெயரால் ஐரோப்பிய அமெரிக்க பிராந்தியங்களிலும் அரசியல் நடத்தப்படுகிறது.

மத தேசியவாதம் என்றும் மத அடிப்படைவாதம் என்றும் மத பயங்கரவாதம் என்றும் அரசியல் கொதி நிலையின் தேவைக்கு ஏற்ற வகையில் மதம் பயன்படுத்தப்படுகிறது .

மத்திய கிழக்கு நாடுகளில் இதன் கொதி நிலை அதிகமாக காணப்படுவதையும் இதர பகுதிகளிலும் மத தேவையின் கொதி நிலை அதிகமாக இருந்தாலும்  ஆளும்தரப்பினால் உபயோகப்படுத்தக் கூடிய வகையில் தேசியவாதமாக காட்டப்படுகிறது .

பல்தேசிய சமூகங்களை கொண்ட பிராந்தியங்களில் பெரும்பான்மையினர் என தம்மை அடையாளப்படுத்தி கொண்டுள்ளவர்கள்,   தமது ஆட்சி அதிகாரப் போக்கினை மேலும் பல ஆண்டுகளுக்கு நிலை நிறுத்தி கொள்ளும் போக்கில், தமது மத கொள்கைகளை சமூகங்களின் மத்தியில் பரப்பும் பொருட்டு  பல்வேறு அடிப்படைவாத அமைப்புகளை பின்புலத்தில் கொண்டிருக்கின்றனர்.

புனை கதைகளையும் ஆட்சியில் உட்புகுத்துவது மட்டு மல்லாது, சமூக பொருளாதார வாழ்வில் பெரும் தாக்கங்களை விளைவித்து வருகின்றனர். கல்வி தலையீடுகள்,  வேலைவாய்ப்பு தலையீடுகள் மட்டுமல்லாது புதிய  சமநிலையற்ற சமூக வாழ்விற்கான காரணிகளாகவும்  மத அதிகாரத்தை அண்டிப் பிழைக்கும் ஆட்சியாளர்கள்  உள்ளனர்.

இந்த கட்டுரைகள் வருட ஆரம்பத்தில் இடம் பெற்ற கொழும்பு குண்டு வெடிப்புகளுடன் ஆரம்பமானது ,இப்பொழுது வருட இறுதியில் இலண்டன் கத்தி குத்து சம்பவங்களில் வந்து நிறைவு பெறுகிறது.

இவை இரண்டிற்கும் இடையிலே இஸ்லாமிய மத அடிப்படைவாத தலைமையான ஐஎஸ் ஐஎஸ் தலைமைத்துவம் அழிக்கப்பட்ட செய்தியை அமெரிக்க அதிபர் பெருமையுடன் கூறிய நிலையையும் நாம் அறிவோம்.

இது ட்ரம்ப் அவர்களின் அடுத்த தேர்தல் குறித்து நகர்வுக்கான ஒரு முத்தாய்ப்பாக பார்க்கப்பட்டாலும், 1990 களில் இருந்து ரஷ்யாவின் வளர்ச்சியும் மத்திய கிழக்கு நாடுகளில் அதன் தலையீடுகளும் அமெரிக்க மூலோபாய முனைப்புகளுக்கு தடைக்கல்லாக இருக்கிறது.

இதன் காரணமான பெரும் பின்னடைவுகளை சந்திக்கும் நிலையில் அமெரிக்க பின்வாங்கல்களும் நிகழ்ந்துள்ளன. இதனாலேயே அல் பக்தாதி கொல்லப்பட்டிருப்பதையும் பல அறிக்கைகள் கூறுகின்றன. இவை குறித்து பின்பு மதங்களுக்கு அப்பால் ஆய்வு செய்யும் கட்டுரைகளில் காணலாம்.

ஆனாலும், லண்டன் பிறிஜ் அருகே இடம் பெற்ற கத்தி குத்துகளுக்குப் பின்பு இன்றைய நிலையிலிருந்து பார்க்கும் பொழுது மதத்தின் பெயரால் இத்தகைய தாக்குதல்கள் மேலும் இடம்பெறமாட்டாது என்பதை உறுதியாக கூற முடியாது.

கொழும்பு குண்டு தாக்குதல்களின் எதிரொலியாக, இந்திய நாடாளுமன்ற தேர்தலில் இந்து அடிப்படைவாத பாரதீய ஜனதா கட்சி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தலில் பல காரணிகள் முன் வைக்கப்பட்டாலும் அவற்றில் பெரும்பாலான காரணிகள் மதம் சார்ந்தவையாகவே இருந்தன.

அதேபோல சிறிலங்காவில்  அதிபர்  தேர்தலில் அதிபர் கோத்தாபய ராஜபக்ச வெற்றி கொள்ளும் நிலைக்கும் மதத்தை முன்நிறுத்திய பயங்கரவாத பிரசாரமும் அடிப்படைவாதமுமே காரணம் என் சர்வதேச பத்திரிகைகள் பலவும் கூறி உள்ளன.

இந்த வகையில் பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் இம்மாதம் 12ஆம் திகதி நாள் இடம்பெற்றது. பிரித்தானியாவில் உள்ள இரு பெரும் கட்சிகளில் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரமி கோபின் அவர்களின் போக்கு நேற்ரோ அமைப்புக்கும் அணுஆயுத பலப்படுத்தல் களுக்கும் எதிரானது.

இஸ்லாமிய அமைப்புகளுடன் மென் போக்கை கொண்டிருப்பவர் மேலைத்தேய முதலாளித்த்துவத்தை சாடுபவர். சர்வதேச அளவல் அடக்கப்பட்ட மக்களின் பால் அனுதாபம் கொண்டவர். செமிட்டிச எதிர்ப்பு என்று கூறக் கூடிய யூத இன எதிப்பு போக்கிற்கு உரியவர் என்ற குற்றம் சாட்டப்பட்டவர்.

இவ்வாறான பல்வேறு தன்மைகளையும் கொண்ட ஜெரமி கோபின் அவர்களின் வரவை தவிர்க்கும் பாங்கில்.  மத்தின் பெயரால் மக்கள் மத்தியில்  இஸ்லாமிய மத வெறுப்பை உண்டாக்கும் போக்கு கொண்டதோ என்று எண்ணவும் தோன்று கிறது

இதன் மூலம் ஜனரஞ்சகவாத போக்கையும் முதலாளித்துவ கொள்கைகளையும்  கொண்ட பொறிஸ்  ஜோன்சன் அவர்களின் வரவு  நல்லதோ கெட்டதோ முதலாளித்துவ, பழமைவாத, ஏகாதிபத்திய வாத்தை சீர்திருத்தும் வகையில்  கட்டமைப்பில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தாத நிலை இருந்தால் போதும் என்ற பார்வை ஒன்று தெரிகிறது.

பிரதமர் போறிஸ்

இந்த கட்டுரை எழுதி கொண்டிருக்கம் போதே பொறிஸ் ஜோன்சன் அவர்கள் மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மிகவும் பலம் வாய்ந்த அரசாங்கம் ஒன்றை பிரித்தானிய மக்கள் அமைப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.

பிரதமர் மாகிரட் தாட்சர் எவ்வளவு அதிகாரத்துடன் செயற்பட கூடிய ஒரு அரசாங்கத்தை மக்கள் 1980 களின் நடுப்பகுதியில் வழங்கி இருந்தார்களோ அதேபோல இன்று அதே கட்சியை சார்ந்த பொறிஸ் ஜேன்சனுக்கும் வழங்கி உள்ளனர்.

அதுமட்டுமல்லாது பல தொழிற்கட்சி கோட்டைகாளாக கருதப்பட்ட இடங்களில் கூட, பொறிஸ் ஜேன்சனின் பழமை வாதகட்சி தனது இடங்களை பிடித்திருக்கிறது

இது ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து எந்தவித ஒப்பந்தமும் இல்லாது  பிரித்தானியா விலகிக் கொள்வதற்கான ஆணையாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். இது பாரிய நிதிப்பளுவை பிரித்தானியா மீது ஏற்படுத்தினாலும் பரவாயில்லை, விலகு என்பது முடிந்த முடிவாகி இருக்கிறது .

அடுத்து இந்த தேர்தல்  முதலாளித்துவ ஜனரஞ்சகவாதிகளின் அதிக ஆதரவை கொண்ட அரசாங்கத்திற்கு அதீத பலத்தை கொடுத்திருக்கிறது.   ஆனால் பலருக்கும் பொறிஸ் ஜோன்சன் அவர்கள் அதீத ஜனரஞ்சக வாதியாக  தெரிய வில்லை என்பதுவே உண்மையாகும்

பிரித்தானியா தனது பொருளாதாரத்தை முன்னிறுத்தி சர்வதேச அரசியலில் ஈடுபட வேண்டுமாயின் நிச்சயமாக  முன்னைநாள் காலனித்துவ பொதுநலவாய நாடுகளுடன் அதீத உறவில் இருப்பதன் மூலமே ஆரம்பிக்க முடியும்

ஆகவே இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேசம் என ஆசிய நாடுகளுடன் முக்கிய உறவை வளர்த்து கொள்வதுடன் ஆபிரிக்க நாடுகள் தென் அமெரிக்க நாடுகளுடனும் கூட தனது உறவுகளை உருவாக்கி கொள்ளும் தேவை உள்ளது..

ஆனால் சர்வதேச அளவில்  மதவாதத்தை தமது தேவைக்கு ஏற்றவகையில் கையாளும் சக்திகள் மேலைத்தேய நலன்களையும் அதன் விழுமியங்களையும் விட்டு விலகும் நாடுகள் மீது , அதிக அழுத்தத்தை பிரயோகிக்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது .

கடந்த கால குண்டு வெடிப்புகள் யுத்தமுனைப்புகள் என பலவற்றையும் வைத்து பார்க்கும் பொழுது  “கண்ணுக்குப் புலப்படாத கை “ சர்வதேச அரசியலில்   அரசுகளுக்கும் அப்பாற்பட்ட வகையில் உலக அளவில் செயற்படுகின்றதா என்ற ஒரு கேள்வியை கேட்டு நிற்கிறது.

கண்ணுக்கு புலப்படாத கை என்பது பொருளாதாரத்துவத்தில் தன்னிச்சையாக செயற்பட கூடிய  சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தை நகர்த்தும் கண்ணுக்குத் தெரியாத சக்திகளின் ஒரு உருவகமாகும். தனிப்பட்ட நலன் மற்றும் உற்பத்தி சுதந்திரம் மற்றும் நுகர்வு மூலம், ஒட்டுமொத்தமாக சமூகத்தின் தேவைகளும் நலன்களும் பூர்த்தி செய்யப்படும் .

அரசியல் பார்வையில் “கண்ணுக்குப் புலப்படாத கைகள்“ என்ற பதம் அரசுகளின் மக்கள் மீதான மறைமுகமாக  உருவகப் படுத்தப்பட்ட  விதிமுறை அதிகாரத்தையும் சட்ட ஒழுங்கை நிலை நிறுத்தி இறையாண்மையை வலியுறுத்தும் சக்தியையும் குறிப்பிடபடுகிறது. இது மேலைத்தேய அரசியல் தத்துவத்தில்  குறிப்பிடப்படும் ஒரு முறையாகும்

இந்த கட்டுரைகளின் படி கேள்வி ஒன்று எழுகிறது.  இன்னும் ஒரு கண்ணுக்கு புலப்படாத கை ஒன்று சர்வதேச அரசியலில்  உள்ளதா?

ஏகாதிபத்திய பண்பை காத்து நிற்கக் கூடிய  மேலைத்தேய முதலாளித்துவம் சார்பாக அரசாங்கங்களை உலகளவில் உருவாக்கும் வகையில் மக்களின் மனதை மதத்திற்கு எதிரான பயத்தை உருவாக்கவதன் மூலம்  முதலாளித்துவம் சார்பாக தூண்டும் அல்லது அதற்கு எதிராக எழக்கூடிய வர்களை திசை திருப்பும் சக்தி ஒன்று  செயற்படுகிறதா என்ற ஒரு கேள்வி தான் அது.

-லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

கட்டுரையாளருடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள -loganparamasamy@yahoo.co.uk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *