மேலும்

கோத்தாவின் இந்திய பயணத்தை சீர்குலைக்கவே பெயர்ப்பலகைககள் அழிப்பு  – மகிந்த

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவின் இந்தியப் பயணத்தை குழப்ப முனையும் ஒரு குழுவினரே,  தென்பகுதியில் தமிழ் மொழியிலான வீதிப் பெயர்ப்பலகைகளை சேதப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

பாணந்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் தமிழ்மொழியிலான பெயர்ப்பலகைகள் அழித்து சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர படங்களுடன் தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார்.

சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்ட இந்த தகவலை அடுத்து, உடனடியாக இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தவும், அழிக்கப்பட்ட பெயர்ப்பலகைகளை மீள அமைக்கவும் சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று தமக்கு நம்பிக்கையான சிலரிடம் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்சவின் இந்தியப் பயணத்தை குழப்ப முனையும் ஒரு குழுவினரே,  தமிழ் மொழியிலான வீதிப் பெயர்ப்பலகைகளை சேதப்படுத்தியுள்ளதாக தாம் நம்புவதாக கூறியுள்ளார்.

தமிழ் சமூகத்துக்கும் இடைக்கால அரசாங்கத்துக்கும் இடையில் பிளவு ஏற்படுவதையும், சிறிலங்கா-இந்தியா உறவுகளை  தகர்த்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு கொடூரமான நடவடிக்கையே இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச வரும் 29ஆம் நாள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *