பெப்ரவரி 15இற்கு முன் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஐதேக எதிர்ப்பு
சிறிலங்கா நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துவதற்கு, ஆதரவு வழங்க ஐதேக நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவிக்கவில்லை என்று அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
” நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துவதற்கு, ஆதரவு அளிக்க ஐதேக நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவிக்கவில்லை.
எனினும், பொதுத் தேர்தலை பெப்ரவரி 15 அல்லது அதற்குப் பின்னர் நடத்துவதற்கு உடன்பட்டால், ஐதேக நாடாளுமன்றக் குழு அதுகுறித்து பரிசீலிக்கும்.
தேர்தலுக்கான நாள் குறித்து அடுத்த சில நாட்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.
சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சந்திக்கவுள்ளார்.
இதன்போது நாங்கள் எந்த நேரத்திலும் அரசாங்கத்தை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம் என்ற தகவலை அவரிடம் கூறுவார்.
முன்னதாக 24 மணிநேரத்துக்குள் பிரதமர் பதவி விலகுவார் என்று கூறியிருந்த போதிலும், இதில் தாமதம் ஏற்படக் கூடும்.
ஏனெனில், சிறிலங்கா அதிபரைச் சந்திப்பதற்கான நேரம் இதுவரை பிரதமருக்கு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் பெரும்பானலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது பதவிகளை கைவிட்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு வசதியாக, பதவிகளை விட்டு விலகி எதிர்க்கட்சியில் அமர நாங்கள் முடிவு செய்து விட்டோம்.
ஐதேக பிளவுபடப் போகிறது என்பது வெறும் வதந்தி தான்.
அதேவேளை, தேர்தலுக்குப் பின்னர் ஐதேக ஆதரவாளர்கள் துன்புறுத்தல்களையும், தாக்குதல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த விடயம் சிறிலங்கா அதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, ஐதேகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சஜித் பிரேமதாச பங்கேற்கவில்லை.
எனினும், அவருக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.