மேலும்

ஈஸ்டர் ஞாயிறன்று இந்திய தூதரகமும் இலக்கு

கொழும்பில் உள்ள இந்திய தூதரகமும், இந்தியர்கள் அடிக்கடி வந்து செல்லும் விடுதி ஒன்றும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளால் இலக்கு வைக்கப்பட்டிருந்ததாக, 21/4 தாக்குதல் குறித்து விசாரித்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவுக்குழுவின் அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையிலேயே, கிடைத்துள்ள புலனாய்வு அறிக்கைகளின்படி, இந்தியத் தூதரகமும் வாய்ப்புள்ள இலக்குகளில் ஒன்றாக இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர், ஏப்ரல் 9ஆம் நாள் ‘உயர் இரகசியம்’ என, காவல்துறை மா அதிபர், மற்றும் தேசிய புலனாய்வு தலைவர், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சஹ்ரான் காசிம்  தேவாலயங்கள், இந்தியத் தூதரகத்தை இலக்கு வைத்து, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

எனினும் அந்த கடிதத்தில், தாக்குதல் தொடர்பான நாள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், தற்கொலைத் தாக்குதல், கத்தி தாக்குதல், பாரஊர்தி தாக்குதல் நடக்கலாம் என – தாக்குதல் நடத்தக் கூடிய விதம் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏப்ரல் 21ஆம் நாள் தாக்குதல் நடப்பதற்கு 12 நாட்களுக்கு முன்னர் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது.

எனினும் பாரிய தாக்குதல் நடப்பதற்கு முதல் நாளான ஏப்ரல் 20ஆம் நாள், அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் ஒரு தகவல் மூலத்திடம் இருந்து “வட்ஸ் அப்“ மூலம் ஒரு தகவலைப் பெற்றார்.

“ஏப்ரல் 21 அல்லது அதற்கு முன்னர் எந்த நேரத்திலும் அவர்கள் சிறிலங்காவில் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளது என்று அறியப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு இடங்களில், ஒரு தேவாலயம் மற்றும் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கும், விடுதி ஆகியவை அடங்கும். மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது” என்று அந்த செய்தியில் இருந்தது.

தாக்குதல் நடந்த நாளில், காலை 8.27 மணியளவில் அரச புலனாய்வு சேவை மீண்டும் செய்தியைப் பெற்றது.

“காலை 6 மணிக்கும் 10 மணிக்கும் இடையில், கொழும்பில் உள்ள மெதடிஸ்த தேவாலயமும் இலக்குகளில் ஒன்று” என அதில் கூறப்பட்டிருந்ததாகவும் தெரிவுக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *