மேலும்

சிறிலங்காவின் புதிய அரசுக்கு மனித உரிமை அழுத்தங்கள் தொடரும் – அமெரிக்கா

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் விவகாரம் குறித்து தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் ஜி. வெல்ஸ், அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவின், ஆசியா-பசுபிக்கிற்கான துணைக்குழுவில் நேற்று உரையாற்றிய போது இவ்வாறு கூறினார்.

“லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டது தொடர்பாக, அமெரிக்கா ஏமாற்றமடைந்திருப்பது குறித்து பகிரங்கமாக குரல் கொடுத்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக அவருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மோசமானவை மற்றும் நம்பகமானவையாகும்.

சிறிலங்கா ஒரு முக்கியமான கடல்சார் சக்தியாகவும், இந்தோ-பசுபிக் பங்காளராகவும் இருக்கிறது.

அமெரிக்க சட்டத்தின் கீழ், பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பைக் குறைப்பதற்கு, இந்தப் பதவி உயர்வு எங்களை கட்டாயப்படுத்துகிறது என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.

காணாமல்போனோர் மற்றும் இழப்பீடுகளுக்கான செயலகங்களை  நிறுவுதல், மற்றும் வடக்கு – கிழக்கில் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களுக்கு மீள ஒப்படைத்தல் போன்ற விடயங்களில் சிறிலங்கா அரசாங்கத்தின் முன்னேற்றங்களை அமெரிக்கா ஊக்குவிக்கிறது.

எனினும், அரசியலமைப்பு சீர்திருத்தம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவது, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுதல் மற்றும் கடந்தகால குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய நம்பகமான நீதித்துறை பொறிமுறையை உருவாக்குதல் உள்ளிட்ட சிறிலங்காவின சில வாக்குறுதிகளில் மெதுவான முன்னேற்றமே காணப்படுகிறது அல்லது முடங்கிப் போயுள்ளது.

இவை மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்காவுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறோம்.

அடுத்தமாதம் நடக்கவுள்ள தேர்தலில் எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் எங்களின் மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரல் தீவிரமாக அழுத்தம் கொடுக்கும்.

இலங்கையர்கள் தங்கள் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்காக நொவம்பர் 16 ஆம் நாள் நடக்கவுள்ள தேர்தல்,  சுதந்திரமானதாக, நியாயமானதாக, வன்முறையற்றதாக இருக்கும் என்றும், ஆசியாவின் பழமையான ஜனநாயகத்திற்கு பொருத்தமான குணங்களை வெளிப்படுத்தும் என்றும்  அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

மேலும், முன்னேற்றத்தை ஆதரிப்பதற்காக, மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதி ஆகியவற்றுக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட விடயங்களில் சிறிலங்காவுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுகிறோம்.

இராஜதந்திர ஈடுபாட்டிற்கு மேலதிகமாக, சிறிலங்காவின் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தவும் சிவில் சமூக அமைப்புகளுக்கு ஆதரவளிக்கவும் நாங்கள் இணைந்து செயற்படுகிறோம்.

பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும், பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கும் சிறிலங்காவின் திறனை நாங்கள் உருவாக்கி வருகிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *