மேலும்

இன்றிரவு ஜப்பான் புறப்படுகிறார் மைத்திரி – அதிபராக கடைசி வெளிநாட்டுப் பயணம்?

சிறிலங்காவில் அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரம் பெற்றுள்ள நிலையில், இந்த தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்துள்ள, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்றிரவு ஜப்பானுக்குப். புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

சிறிலங்கா அதிபரும், அவரது மனைவி ஜெயந்தி புஷ்பாகுமாரியும், ஜப்பானிய பேரரசர் நருஹிடோவின், சிம்மாசனம் ஏறும் விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

வரும் 22ஆம் நாள் ஜப்பானிய பேரரசராக, நருஹிடோ பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில், சிறிலங்கா அதிபருடன், பிரித்தானிய இளவரசர் சாள்ஸ், சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொகமட் பின் சல்மான்,  மற்றும் பல உலகப் பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

சிறிலங்கா அதிபருக்கு ஜப்பானிய பேரரசர் நருஹிடோ வரும் செவ்வாய்க்கிழமையும், ஜப்பானிய பிரதமர்  ஷின்சோ அபே வரும் புதன்கிழமையும் விருந்துபசாரம் அளிக்கவுள்ளனர்.

வரும் வியாழக்கி்ழமையே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கொழும்பு திரும்பவுள்ளார்.

2015இல் சிறிலங்கா அதிபராகப் பதவியேற்ற பின்னர், மைத்திரிபால சிறிசேன, ஊடகங்கள் இல்லாமல், அதிபர் செயலக மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மாத்திரம் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

இன்னமும் 27 நாட்களில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *