மேலும்

சிறிலங்கா அதிபர் தேர்தல் – ஐந்து தமிழ்க் கட்சிகள் பொது உடன்பாட்டில் கைச்சாத்து

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில், ஆறு தமிழ்க் கட்சிகளுடன், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, பொது இணக்கப்பாட்டு ஆவணத்தில் ஐந்து கட்சிகள் இன்று கையெழுத்திட்டன.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக,  ஆறு தமிழ்க் கட்சிகளுடன், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் பிரதிநிதிகள்  இணைந்து, பேச்சுக்களை நடத்தி வந்தனர்.

இன்று ஐந்தாவது தடவையாக நடத்தப்பட்ட பேச்சுக்களின் முடிவில்,  இன்று மாலை 6.30 மணியளவில் பொது இணக்கப்பாட்டு ஆவணம் ஒன்றில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர், ஒப்பமிட்டனர்.

எனினும், இந்தப் பேச்சுக்களில் பங்கேற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இந்த ஆவணத்தில் கையெப்பமிட மறுத்து கூட்டத்தை விட்டு வெளியேறியது.

தமிழ்க் கட்சிகள் முன்வைத்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பொது இணக்கப்பாட்டு ஆவணத்தை முன்னிறுத்தி, ஐதேக வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனும், பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடனும் பேச்சு நடத்துவதென முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்தில், புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால வரைவை நிராகரிப்பதாக கூறப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

எனினும், அதற்கு தமிழ் அரசுக் கட்சி, புளொட் என்பன எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த பேச்சுக்களை முறித்துக் கொண்டு வெளியேறியது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

“ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கான இடைக்கால யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத்தில் கைச்சாத்திடுவோம் என வலியுறுத்தினோம்.

அது நடக்கவில்லை. எங்களை திட்டமிட்டு ஓரங்கட்டியுள்ளனர்.

நான் மக்களுக்கு எச்சரிக்கிறேன். இந்த ஐந்து கட்சிகளையும் நம்பி வரப்போகும் தேர்தலில் முடிவெடுத்தால், இனத்திற்கு கிடைக்கக் கூடிய உரிமைகளை மட்டுமல்ல, அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய சந்தர்ப்பங்களையும் நாம் இழக்க நேரிடும்.

போலி ஒற்றமையைக் காட்டி பதவிகளை பெற்று, மக்களை  ஏமாற்ற நாங்கள் தயாரில்லை.

சிங்கள கட்சிகளும், சிங்கள பேரினவாத தரப்புக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கத் தயாராக இருந்த மரியாதையைக் கூட,  இந்தக் கட்சிகள் தமிழ் தேசிய முன்னணிக்குத் தரவில்லை.” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *