மேலும்

வியாழன்று பலாலியில் பரீட்சார்த்த விமானத்தை தரையிறக்குகிறது அலையன்ஸ் எயர்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கு  வரும் வியாழக்கிழமை சென்னையில் இருந்து பரீட்சார்த்த விமானப் பறப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.

அன்றைய நாள், சென்னையில் இருந்து, அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் பரீட்சார்த்த விமானம்,  யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கும்.

அத்துடன் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து, இந்திய நகரங்களுக்கு மேற்கொள்வதற்கு பயணங்களை ஆரம்பிக்க முன்னதாக தயாரிக்கப்பட்ட திட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக யாழ்ப்பாணத்தில் இருந்து புதுடெல்லி, மும்பை, கொச்சி போன்ற நகரங்களை இணைக்கும் வகையிலான சேவைகளை ஆரம்பிக்கவே திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நகரங்களில், தமக்கு மிகவும் நெருக்கமான தொடர்புடைய, தமிழ்நாட்டில் உள்ள நகரங்கள் விடுபட்டது குறித்து வடக்கில் உள்ள தமிழ் மக்கள் கவலை எழுப்பியிருந்தனர்.

எனினும், யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை, திருச்சி மற்றும் கொச்சி ஆகிய நாடுகளுக்கு விமானங்களை இயக்க அதிகாரிகள் தயாராகி வருவதால், இந்த திட்டம் இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது

“எமது மக்களுடனான தொடர்புகள் காரணமாக, தென்னிந்திய நகரங்களுடன் சேவையைத் தொடங்குவது தர்க்கரீதியான அர்த்தத்தை தருகிறது,

ஆனால், விமான நிறுவனம் எங்களுக்கு ஒரு உறுதிப்பாட்டைக் கொடுக்கும் வரை, எங்களால் பயண மார்க்கத்தை இறுதி செய்ய முடியவில்லை” என்று விமான நிலைய, விமானசேவைகள், நிறுவனத்தின் உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும தெரிவித்துள்ளார்.

எயர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயர் நிறுவனம், வரும் வியாழக்கிழமை சோதனை விமானத்துடன் சேவைகளை ஆரம்பிக்க முன்வந்துள்ளது.

இந்த நிறுவனம் ஒரு வாரத்தில் மூன்று விமானங்களை இயக்கும், பின்னர் தேவைக்கேற்ப சேவைகளை அதிகரிக்கும் என்று, பேச்சுக்களில் பங்கேற்ற சிறிலங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *