மேலும்

மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழ்க் கட்சிகள் சந்திப்பு – பொது இணக்கத்துக்கு முயற்சி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பொது அறையில் நேற்றிரவு இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடலில், இலங்கைத் தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் அதன் தலைவர்  மாவை. சோ. சேனாதிராசா மற்றும்,நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில், அதன் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன், மற்றும்  க.சுகாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

புளொட் சார்பில் அதன் தலைவர் த. சித்தார்த்தன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் மற்றும் எஸ். ராகவன் ஆகியோரும் ரெலோ சார்பில் அதன் செயலாளர் நாயகம்  என். சிறிகாந்தா ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் அதன் பேச்சாளர் க.அருந்தவபாலனும், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

தமிழ் மக்களின் நலன்களை உறுதி செய்யும் வகையில் அதிபர் தேர்தலில்  பொது நிலைப்பாடு ஒன்றுக்கு வருவதற்கான இணக்க நிலை தோற்றுவிக்கப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரே அதிகாரபூர்வமான நிலைப்பாட்டை வெளியிடுவர் என்றும் சந்திப்பை முடித்து வெளியேறிய கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பு சாதகமாக அமைந்துள்ளதாகவும், அடுத்த சந்திப்பை நாளை மீண்டும் நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *