மேலும்

மூடிய அறை வாக்குறுதியின் அடிப்படையில் சஜித்துக்கு ஆதரவளிக்க முடியாது – சம்பந்தன்

ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதற்கு, வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் அபிலாசைகள் மற்றும் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான தனது திட்டங்களை நிறைவேற்ற அவர் என்ன செய்வார் என்பதை வெளிப்படுத்துமாறு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் 3 மணி தொடக்கம் 4.30 மணி வரை இடம்பெற்றது.

ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்ரம, ரவி கருணாநாயக்க ஆகியோரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பில், தமது தரப்பில் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ரணில் விக்ரமசிங்க கூறினார்.

அதற்கு,  இரா.சம்பந்தன், வடக்கு,கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் அபிலாசைகளும், அதிகாரப் பகிர்வுமே தமது கட்சியின் முதன்மையான கரிசனையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மூடிய அறைக்குள் அளிக்கப்படும் வாக்குறுதிகளின் அடிப்படையில் ஐதேக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கத் தாம் தயார் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

சஜித் பிரேமதாச, நாட்டின் தேசியப் பிரச்சினைக்கான தனது தீர்வு என்ன என்பதை, தேர்தல் அறிக்கையில் உள்ளடக்க வேண்டும். அந்த தேர்தல் அறிக்கை தெற்கின் சிங்களவர்களுக்கு கிடைக்க வேண்டும், அவர்கள் ஐதேக வேட்பாளருக்கு ஒப்புதல் அளித்தால், அதிபர் தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பரிசீலிக்கும் என்றும் இரா. சம்பந்தன் கூறினார்.

இதையடுத்து, தாம் இந்த விவகாரம் குறித்து ஐதேமு  தலைவர்களிடம் ஆலோசித்து விட்டு, அடுத்த சந்திப்பின் போது, தமது நிலைப்பாட்டை கூட்டமைப்புக்குத் தெரியப்படுத்துவதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எனினும், ஐதேகவுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான அடுத்த கூட்டம் எப்போது என்று இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *