மேலும்

கோத்தாவின் வேட்புமனு நீதிமன்றத்தின் கையில் – வெள்ளியன்று முக்கிய உத்தரவு

கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, நாளையும், நாளை மறுநாளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி,   சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர, காமினி வியாங்கொட ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டது தொடர்பான முறையான ஆவணங்களை வழங்காமல், சிறிலங்காவின் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றை கோத்தாபய ராஜபக்ச பெற்றுக் கொண்டது சட்டவிரோதம் என்றும், அவை செல்லுபடியற்றது எனவும் இந்த மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள வரை, கோத்தாபய ராஜபக்சவை சிறிலங்கா குடியுரிமை கொண்டவராக அங்கீகரிக்க வேண்டாம் என்று உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

இந்த மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த மனு ஒக்ரோபர் 2, 3ஆம் நாள்களில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் யசந்த கோத்தாகொட தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழுவினால் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வழக்குடன் தொடர்புடைய சட்டவாளர்களை வெள்ளிக்கிழமையும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மனுவை விசாரிக்கும் மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழுவில் யசந்த கோத்தாகொட, அர்ஜூன ஒபேசேகர, மகிந்த சமயவர்த்தன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நேற்று இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இந்த மூன்று பெர் கொண்ட நீதியரசர்கள் குழு அறிவிக்கப்பட்ட போது, அதற்கு கோத்தாபய ராஜபக்சவின் சட்டவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

யசந்த கோத்தாகொட மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் இந்த மனுவை விசாரிக்கும் குழுவில் இடம்பெறுவதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எனினும், அதனை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் யசந்த கோத்தாகொட, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து சட்டவாளர்களும் வழக்கை விசாரிக்கும் நீதியரசர்களின் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதை உறுதி செய்ய நீதிமன்றம் “அசாதாரண நடவடிக்கைகளை” எடுத்து வருகிறது என்று கூறினார்.

இந்த விடயத்தின் அரசியல் முக்கியத்துவத்தை தாங்கள் உணர்ந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

நேற்றைய விசாரணைகளில் முதல் இரண்டு மனுதாரர்களான குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆகியோர் சமூகமளிக்கவில்லை.

நேற்றுக்காலையும் பின்னர் பிற்பகலிலும் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

பிற்பகல் நடந்த அமர்வின் போது, 2019இல் கோத்தாபய ராஜபக்சவுக்கு தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றை வழங்கியது தொடர்பான அனைத்து ஆவணங்களையும்  சமர்ப்பிக்குமாறு, அமைச்சர் வஜிர அபேவர்த்தன, உள்நாட்டு விவகார அமைச்சின் செயலர் காமின் செனிவிரத்ன,குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் , ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆகியோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

எதிர்வரும் ஒக்ரோபர் 7ஆம் நாள் காலை 9 மணி தொடக்கம், 12 மணிவரையும் அதிபர் வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த நிலையில், கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமை தொடர்பான ஏதேனும் உத்தரவுகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டால், வரும் திங்கட்கிழமை அவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *