திருமலையில் இரண்டு அனல் மின் நிலையங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி
திருகோணமலை – சம்பூரிலும், புத்தளம்- நுரைச்சோலையிலும் மூன்று அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளது.
நாட்டின் மின்சார தேவைகளை கருத்தில் கொண்டு சிறிலங்காவின் அமைச்சர் ரவி கருணாநாயக்க இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.
இதற்கமைய, திருகோணமலை பவுல் பொயின்ட் பகுதியில் தலா 300 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு உயர் திறன்மிக்க அனல்மின் நிலையங்களும், நுரைச்சோலையில் 300 மெகாவாட் திறன் கொண்ட மற்றொரு அனல் மின் நிலையமும் அமைக்கப்படவுள்ளன.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைத்து முடிப்பது என்றும், அமைச்சரவைப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக திருகோணமலை சம்பூரில் 500 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை இந்தியாவின் உதவியுடன் அமைக்க இணக்கம் காணப்பட்டிருந்தது.
எனினும், உள்ளூர் மக்களின் எதிர்ப்பினாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டதாலும் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
அத்துடன், நாட்டில் புதிதாக அனல்மின் திட்டங்களை அமைப்பதற்கு சிறிலங்கா அதிபரும், பிரதமரும் எதிர்ப்பு வெளியிட்டு வந்தனர்.
இதனால் இயற்கை எரிவாயு மின் திட்டங்களை அமைப்பது குறித்து பேசப்பட்ட போதும், அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
அதேவேளை, நாட்டில் மின்சார தேவை அதிகரித்து வருகின்ற நிலையிலும், நீர்மின் உற்பத்தி திறன் குறைவடைந்து செல்லும் சூழலிலும், வேறு வழியின்றி மீண்டும் அனல்மின் நிலையங்களை அமைக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.