மேலும்

சிறிலங்கா விரைந்துள்ள இந்திய புலனாய்வு அதிகாரிகள் குழு

இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகத்தின் (என்ஐஏ) அதிகாரிகள் இரண்டு பேர் கொண்ட குழு,  நேற்று முன்தினம் கொழும்பு வந்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலை அடுத்து எழுந்துள்ள பாதுகாப்பு  விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவே, இந்திய புலனாய்வு அமைப்பின் உயர் அதிகாரிகள் சிறிலங்கா வந்துள்ளனர்.

காவல்துறை மா அதிபர் அசோக் மிட்டல் தலைமையிலான இரண்டு பேர் கொண்ட இந்தக் குழு, சிறிலங்கா அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகிறது.

தென்னிந்தியாவில் ஐஎஸ் அமைப்பின் தொடர்புகள் மற்றும் பல்வேறு கொலைச் சதித் திட்டங்கள் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகளில் அனுபவம் பெற்ற அசோக் மிட்டல் இந்தக் குழுவுக்கு தலைமை தாங்கி கொழும்பு சென்றுள்ளார்.

இவர்கள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்ட  அடிப்படைவாத முஸ்லிம்கள் இந்தியாவில் ஏற்படுத்தியிருந்த தொடர்புகள் குறித்தே கவனம் செலுத்தி வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் இணைந்து செயற்படுவதற்காக இந்திய புலனாய்வு அதிகாரிகள் கொழும்பு செல்லவில்லை என்றும்,  குண்டுத் தாக்குதல்களை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு, இந்தியாவின் தென்பகுதியில் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஏற்படுத்தியிருக்கக் கூடிய தொடர்புகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளவே இவர்கள் கொழும்பு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது,

குண்டுத் தாக்குதல்களை அடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள, சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்கள், தொலைபேசி இலக்கங்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய விபரங்களைப் பெற்றுக் கொள்வதும் இந்திய அதிகாரிகளின் நோக்கமாக கருதப்படுகிறது,

தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் இந்தியாவுக்கு மேற்கொண்டதாக கூறப்படும் பயணம் தொடர்பான தகவல்களையும் இந்திய புலனாய்வு அதிகாரிகள் சிறிலங்கா விசாரணையாளர்களிடம் கோரவுள்ளனர்.

இவர்களின் பயணத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் பச்சைக்கொடி காண்பித்த பின்னரே, இந்திய உள்துறை அமைச்சு அனுமதி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *