மேலும்

தெரிவுக்குழு அறிக்கையை வெளியிட எதிர்ப்பு – நாடாளுமன்ற எதிரொலிகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கையை,  அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது விவாதம் நடத்தப்படுவதற்கு முன்னர், வெளியிட வேண்டாம் என்று ஜேவிபி கோரியுள்ளது.

ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இந்த கோரிக்கையை விடுத்தார்.

“குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும்,  அதனைத் தடுக்கத் தவறிய அரசியல் தலைமைத்துவம் மற்றும் பாதுகாப்பு பொறிமுறைகளும் தெரிவுக்குழுவினால் விசாரிக்கப்பட வேண்டும்.

சிறிலங்கா அதிபர், பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்களும் தெரிவுக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா அதிபரையும் அழைக்க வேண்டும்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு,  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சராகவும் பதவி வகிப்பதால், அவரையும் தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க அழைக்க வேண்டும் என்று ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

நாட்டின் தலைவர் என்ற முறையிலும், பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்ற வகையிலும் சிறிலங்கா அதிபரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்க கோரிக்கை விடுத்தார்.

ஐதேக உறுப்பினர் ஆஷூ மாரசிங்க, சிறிலங்கா அதிபரை தெரிவுக்குழுவுக்கு அழைக்க வேண்டியது முக்கியம் என்றார்.

சிறிலங்கா அதிபரிடம் கேள்வி எழுப்பாவிடின், தெரிவுக்குழுவினால் பயனில்லை என்று ஐதேக உறுப்பினர் எஸ்எம் மரிக்கார் கூறினார்.

தயாசிறி எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் ஒரு அதிபரை விமர்சனத்துக்கு உட்படுத்தினாலும், தெரிவுக்குழு முன்பாக நாட்டின் அதிபரை அழைப்பது மரபு அல்ல என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எதிர்ப்புத் தெரிவித்தார்.

தெரிவுக்குழு விசாரணை – ஊடகங்களுக்கு அனுமதி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக, விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளைப் பார்வையிடுவதற்கு ஊடகங்களை அனுமதிக்க சபாநாயகர் கரு ஜெயசூரிய முடிவு செய்துள்ளார்.

இதற்காக, நாடாளுமன்ற வளாகத்தில் அடுத்த மாதம் சிறப்பு ஊடகப் பிரிவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

தற்போது ஊடகங்களுக்கு உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறும், நாடாளுமன்ற செயலர் தம்மிக தசநாயக்கவுக்கு சபாநாயகர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

எந்தவொரு நாடாளுமன்ற தெரிவுக்குழு தலைவரும், ஊடகங்களை அழைப்பதற்கு அதிகாரம் உள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

கவிந்தவுக்கு பதில் ராஜித

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக, விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தன தாம் அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக நேற்று அறிவித்தார்.

இதையடுத்து, அவரது இடத்துக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 8 உறுப்பினர்களுடன், ஜேவிபி உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவும் தெரிவுக்குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *