மேலும்

இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த அமெரிக்கா- சிறிலங்கா முடிவு

இராணுவத்துக்கும் இராணுவத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு அமெரிக்காவும் சிறிலங்காவும் இணங்கியுள்ளன.

வொசிங்டனில் நடந்த உயர்மட்டப் பேச்சுக்களை அடுத்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இரண்டு நாடுகளும் இதனைத் தெரிவித்துள்ளன.

“ஜனநாயகம், மனித உரிமைகள், மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பின் அடிப்படையில், அமெரிக்கா-சிறிலங்கா பங்குடமை கலந்துரையாடல் மே 6ஆம் நாள் வொசிங்டனில் நடைபெற்றது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலர் டேவிட் ஹாலே ஆகியோரின் இணைத் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தையும்,  இரண்டு அரசாங்கங்களும் மீள உறுதிப்படுத்தின. பங்குடமையை மேலும் வலுப்படுத்துவதற்காக பணியாற்றுவதற்கும் உறுதி பூண்டுள்ளன.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து,  தீவிரவாதத்துக்கு எதிரான சிறிலங்காவுடன் இணைந்து நிற்பதை வெளிப்படுத்தி அமெரிக்க அதிபர் வெளியிட்ட அறிக்கை மற்றும் சிறிலங்காவுக்கு உதவி வழங்குவதாக எடுக்கப்பட்ட முடிவை அமெரிக்கா மீண்டும் உறுதிப்படுத்தியது. அமெரிக்காவின் இந்த உதவியை சிறிலங்கா மதிக்கிறது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பன்முக உதவிகள், எவ்பிஐ புலனாய்வாளர்களின் விசாரணை உதவிகள் மற்றும் எதிர்காலத்தில் சாத்தியமாகக் கூடிய உதவிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அனைத்துலக சட்டங்களை மதிக்கும் வகையில்  இந்தோ -பசுபிக் சமுத்திரங்களில்,  பாதுகாப்பான கடல் பயணங்களை உறுதிப்படுத்துவதற்கு, அமெரிக்காவும் சிறிலங்காவும் இணைந்து பணியாற்றும்.

கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான அமெரிக்க ஆதரவு, கூட்டு இராணுவ செயற்பாடுகள், சிறிலங்காவின் அமைதி காப்பு நடவடிக்கைகள், சிறிலங்கா அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் பயிற்சி அளிப்பது, மற்றும்  அமெரிக்க கப்பல்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் வருகைகள், உள்ளிட்ட  தற்போதுள்ள இருதரப்பு பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை இரண்டு நாடுகளும் வரவேற்றன.

இராணுவ- இராணுவ ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

நிலையான அமைதி மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்கான, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நீதி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் சிறிலங்காவின் அர்ப்பணிப்பை அமெரிக்கா வரவேற்கிறது.

காணாமல் போனோர் பணியகம்,  இழப்பீடுகளுக்கான பணியகம், மற்றும் படையினர் வசமிருந்த நிலங்களை மீளளிப்பது தொடர்பான விடயங்களில் காணப்பட்டுள்ள முன்னேற்றங்களை அமெரிக்கா ஏற்றுக் கொள்கிறது.

ஜனநாயகம், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகள், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி, நீதி மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளை வலுப்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் தனது கடப்பாடுகளை வலியுறுத்தியுள்ளது.

இந்த கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்கா ஊக்கமளிக்கும்.” என்றும், அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் போது, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனையும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்தித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *