மேலும்

நாளை சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

ஆசிரிய நாகரீகங்களின் உரையாடல் மாநாடு என்ற கருத்தரங்கில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் சீனாவுக்குச் செல்கிறார். பீஜிங்கில் இந்த மாநாடு வரும் 15ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது.

47 ஆசிய நாடுகளின் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் 2000 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர் என்று, அதற்கான அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, வரும் செவ்வாய்க்கிழமை சீன அதிபர் ஷி ஜின்பிங்கை, சிறிலங்கா அதிபர் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு இரண்டு நாடுகளின் தலைவர்களும் தனியாக – உதவியாளர்களின்றி உரையாடவுள்ளனர்.

சீன பிரதமர் லி கெகியாங்குடனும், சிறிலங்கா அதிபர் இதுபோன்று தனியான பேச்சுக்களை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விபரங்களை வெளியிட்டுள்ள சிறிலங்கா அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள், சீன அதிபருடன் சிறிலங்கா அதிபர் என்ன விடயங்கள் குறித்து பேசவுள்ளார் என்பதை விபரிக்கவில்லை.

எனினும், அண்மையில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அதனையடுத்து சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சீன அதிபருக்கு சிறிலங்கா அதிபர் விளக்கிக் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் உதவியுடனான திட்டங்களை முன்னெடுப்பதில், தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலைகளால் பாதிப்பு ஏற்படாது என்பதையும் அவர் எடுத்துக் கூறவுள்ளார் என்றும் தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *