மேலும்

படை அதிகாரிகளைக் கொண்டு வெளிநாடுகளின் பயண எச்சரிக்கைகளை நீக்க முயற்சி

சிறிலங்காவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு வெளிநாடுகள் பல பயண எச்சரிக்கைகளை நீக்குவதற்காக, சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளைப் பயன்படுத்தி, அரசாங்கம் கடுமையான பரப்புரைகளில் இறங்கியுள்ளன.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, சிறிலங்காவுக்குப் பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளால்,  37 பயண எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

குண்டுவெடிப்புகளை அடுத்து சிறிலங்கா வரும் சுற்றுலாப் பயணிகளின் தொகை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நிலையில், மீண்டும் சுற்றுலாத் துறையை தூக்கி நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் பெரும் பிரயத்தனம் எடுத்து வருகிறது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகளைச் சந்தித்து, பயண எச்சரிக்கைகளை நீக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், அதற்குச் சரியான பதில் கிடைக்காத நிலையில், சிறிலங்கா அரசாங்கம், வெளிநாட்டு தூதுவர்களைத் திருப்திப்படுத்தும் முயற்சிகளில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளையும், பாதுகாப்பு அதிகாரிகளையும் களமிறக்கியுள்ளது.

வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து, நாட்டின் பாதுகாப்பு நிலைமைகளின் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று நம்ப வைக்கும் முயற்சிகளில் இராணுவ அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, நேற்று கொழும்பில் உள்ள அனைத்து வெளிநாட்டுத் தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்களைச் சந்தித்து- நாட்டின் தற்போதை நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தினார்.

அத்துடன், ஒவ்வொரு நாட்டின் தூதரகத்துடனும் தனிப்பட்ட முறையிலும், இதுபோன்ற கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் இராணுவப் புலனாய்வு அதிகாரி உள்ளிட்டவர்கள் ஜேர்மனி தூதுவரைச் சந்தித்து பிந்திய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கிக் கூறியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது, இராணுவப் புலனாய்வு அதிகாரி, ஜேர்மனி தூதுவரிடம் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார்.

இதன்போது, தற்போது பாதுகாப்பு நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை ஜேர்மனி தூதுவர் ஏற்றுக் கொண்டுள்ளார். எனினும் பயண எச்சரிக்கையை நீக்குவதற்கு சில படிமுறைகளைக் கடந்து செல்ல வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவினர் பிரான்ஸ் தூதுவரையும் சந்தித்துள்ளனர். எதிர்கால பாதுகாப்புக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவரும் திருப்தி வெளியிட்டுள்ளார். எனினும் சில நாட்கள் காத்திருந்த பின்னரே, பயண எச்சரிக்கைகளில் திருத்தங்களைச் செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சீனத் தூதுவரையும் தாம் விரைவில் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *