மேலும்

ட்ரோன்  கருவிகளை பறக்க விடத் தடை

ட்ரோன் உள்ளிட்ட அனைத்து விமானியில்லா விமானங்களும் பறக்கவிடப்படுவதற்கு சிறிலங்காவின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தடைவிதித்துள்ளது.

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் குண்டுவெடிப்பை அடுத்து, குண்டுதாரிகளின் மறைவிடமாகப் பயன்படுத்தப்பட்ட சம்மாந்துறை வீட்டில் இருந்து ட்ரோன் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து, ட்ரோன் கருவிகளைப் பறக்கவிடக் கூடாது என்றும் சிறிலங்கா அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

எனினும், நேற்றுமுன்தினம் இரவு கொழும்பு ஜாவதத்தை பிரதேசத்தில் ட்ரோன் ஒன்று வட்டமடித்துள்ளது.

இதுபற்றி சிறிலங்கா காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விரைந்து சென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். எனினும், அந்  ட்ரோன் கருவி, கடல் பக்கமாக தப்பிச் சென்று விட்டது.

பின்னர் சிறிலங்கா கடற்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு கடலில் தேடுதல்கள் நடத்தப்பட்ட போதும், அந்த ட்ரோன் கருவி கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில், ட்ரோன் உள்ளிட்ட விமானியில்லா எல்லா வகையான விமானங்களையும் பறக்க விடுவதற்கு தடைவிதிக்கும் உத்தரவை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை பிறப்பித்துள்ளது.

விமானியில்லா விமானங்களை பறக்க விடுவதற்கு சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையினால் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அனுமதிகள் தற்காலிகமாக, மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரசபையின் தலைவர் நிமலசிறி தெரிவித்தார்.

இந்த தடை உத்தரவை மீறுவோரை பிடியாணையின்றி கைது செய்ய முடியும் என்றும், அவர்களுக்கு 63 இலட்சம் ரூபா தண்டமோ அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்பட முடியும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *