தெமட்டகொட குண்டுவெடிப்பில் 3 சிறிலங்கா காவல்துறையினர் பலி
தெமட்டகொட பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் மூவர் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெமட்டகொடவில் உள்ள மகாவில வீடமைப்புத் திட்ட, அடுக்குமாடிக் குடியிருப்பில், வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடம் ஒன்றை சோதனையிட முயன்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
காவல்துறையினர் வீட்டுக்குள் நுழைந்த போது அங்கிருந்த தற்கொலைக் குண்டு தாரி என சந்தேகிக்கப்படும் நபர் குண்டை வெடிக்க வைத்துள்ளார். இதில் மூன்று காவல்துறையினர் உயிரிழந்தனர்.
இன்றைய குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் இங்கேயே பதுங்கியிருந்தனர் என்றும் அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்களில் மட்டக்களப்பு தாக்குதலுக்கு குண்டு எடுத்துச் சென்றவரும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நான்கு பேர் இங்கிருந்து கைது செய்யப்பட்டனர் என்றும் மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் பல சடலங்கள் அந்த வீட்டுக்குள் இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.