மேலும்

சிறிலங்கா குண்டுவெடிப்புகள் – அவசரமாக கூடும் தேசிய பாதுகாப்புச்சபை

சிறிலங்காவில் ஆறு இடங்களில் அடுத்தடுத்த நிகழ்ந்த குண்டு வெடிப்புகளை அடுத்து தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றுள்ள நிலையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய பாதுகாப்புச் சபையை அவசரமாக கூட்டியுள்ளார்.

அத்துடன் நாடெங்கும் பாதுகாப்பை பலப்படுத்தவும், முப்படையினர், காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இரத்ததானம் வழங்குமாறு கோரிக்கை

சிறிலங்காவில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகளால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையின் இரத்த வங்கியில் இரத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களின் உயிர்களைக் காப்பாற்ற அவசரமாக இரத்ததானம் செய்ய முன்வருமாறு பொதுமக்களிடம், தேசிய இரத்த வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

அமைதி காக்குமாறு கோருகிறார் சிறிலங்கா அதிபர்

அனைத்து இலங்கையர்களையும் அமைதியாக இருக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறிலங்காவில் இன்று அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 100இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ள நிலையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தினால் தான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை முப்படையினர், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விசாரணைகளுக்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறும் விசாரணை முன்னெடுக்கப்படும் கால கட்டத்தில் பொறுமை மற்றும் அமைதி காக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *