மேலும்

பாகிஸ்தான் தேசிய நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மகிந்த

பாகிஸ்தான் தேசிய நாளை முன்னிட்டு கொழும்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும், அவரது அணியைச் சேர்ந்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் 79 ஆவது தேசிய நாளை முன்னிட்டு கொழும்பு கலதாரி விடுதியில் நேற்று மாலை சிறப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். சிறப்பு விருந்தினராக  எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார்.

மகிந்த ராஜபக்சவுடன், அவரது ஆதரவு தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்த்தன, ஜி.எல்.பீரிஸ், போன்றவர்களும், நிமால் சிறிபால டி சில்வா, அதுரலியே ரத்தன தேரரும் நிகழ்வில் காணப்பட்டனர்.

எனினும், அரசதரப்பைச் சேர்ந்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்ட ஒரு சிலரே இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் ஒரு கட்டமாக பாகிஸ்தான் கொடி அலங்காரத்துடன் தயாரிக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டது. அதனை ரவூப் ஹக்கீம், பாகிஸ்தான் தூதுவர் ஆகியோருடன் இணைந்து மகிந்த ராஜபக்ச வெட்டியிருந்தார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது, பாகிஸ்தானுடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டிருந்தார்.

அண்மைக்காலமாக பாகிஸ்தானுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான நட்பு இன்னும் வலுப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *