நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் ஜேவிபியின் முயற்சிக்கு ஆதரவு – இரா.சம்பந்தன்
நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிப்பதற்கு, ஜேவிபி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று கூட்டமைப்பின் தலைவர், இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜேவிபியின் தலைமையகத்தில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், ஜேவிபி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக, இதன்போது முக்கியமாகப் பேசப்பட்டது.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இரா. சம்பந்தன்,
“நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் ஆட்சி முறையை ஒழிக்க ஜேவிபி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்.
அதிகாரப் பகிர்வுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு, ஜேவிபியினர் முழுமையான ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளமை திருப்தி அளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.
நேற்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன் , செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், கோடீஸ்வரன் கவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜேவிபி சார்பில், அனுர குமார திசநாயக்க, ரில்வின் சில்வா, கே.டி லால்காந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.