மேலும்

400 பில்லியன் ரூபாவை நெருங்கும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செலவினம்

இந்த ஆண்டு பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 400 பில்லியன் ரூபாவை நெருங்கியுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 05ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திலேயே இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆண்டு பாதுகாப்பு அமைச்சுக்கு, 393 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. கடந்த ஒக்ரோபர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கு, 307 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.

காவல்துறை திணைக்களம் தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடு 383 பில்லியனாக அதிகரித்துள்ளது,

தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ், சிறிலங்கா இராணுவம், கடற்படை, விமானப்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், காவல்துறை ஆகியன இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, புதிதாக சமர்ப்பிக்கப்படவுள்ள நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில், உள்நாட்டு விவகாரங்கள், மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்கு 292 பில்லியன் ரூபாவும், பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு 216.5 பில்லியன் ரூபாவும், சுகாதார அமைச்சுக்கு 187.4 பில்லியன் ரூபாவும், நிதி, ஊடகத்துறை அமைச்சுக்கு 183.8 பில்லியன் ரூபாவும்,  நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சுக்கு 175.5 பில்லியன் ரூபாவும், ஒதுக்கப்படவுள்ளது.

இந்த ஆண்டின் மொத்த அரசாங்க செலவினமாக 4,470 பில்லியன் ரூபா எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த தேசிய உற்பத்தியில் 4.8 வீதம், பாதீட்டு பற்றாக்குறையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2019 வரவுசெலவுத் திட்டத்தில், 2,200 பில்லியன் ரூபா கடன் சேவைகளுக்காக ஒதுக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், மார்ச் 5ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *